ஓமலூர்:-
பெங்களூருவில் இருந்து சேலம் வந்த அரசு பஸ்சில் 50 பவுன் நகையுடன் பையை மாற்றி எடுத்து சென்ற முதியவர், அதனை தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.
முதியவர்
சேலம் தாதகாப்பட்டி எஸ்.ஆர்.வி. காலனி பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 35), இவரது மனைவி நளினி. கணவன், மனைவியும் பெங்களூருவில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காலை 8 மணிக்கு சேலத்துக்கு அரசு பஸ்சில் வந்தனர். நளினி தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, தங்க வளையல் 5, நெக்லஸ், தங்கஆரம், கெடிகாரம் என சுமார் 50 பவுன் நகைகளை கழட்டி ஒரு பையில் வைத்து, தனது காலுக்கு அருகில் வைத்துகொண்டு பஸ்சில் அமர்ந்துள்ளார்.
அதே பஸ்ஸில் தீவட்டிப்பட்டியை அடுத்த ஜோடுகுளி கொட்டாளூர்புதூர் பகுதியை சேர்ந்த மாதலிங்கம் (78) என்பவர் ஏறி உள்ளார். மாதலிங்கம் மற்றும் ஜீவா, நளினி ஆகியோர் அடுத்தடுத்து சீட்டுகளில் அமர்ந்திருந்ததாக தெரிகிறது.
புகார்
மாதலிங்கம் தான் இறங்க வேண்டிய தீவட்டிபட்டி பஸ் நிறுத்தம் வந்ததும் இறங்கி வீட்டிற்கு சென்று விட்டார். இதனிடையே மதியம் 2 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு அந்த பஸ் வந்தது. நளினி மற்றும் ஜீவா பஸ்சை விட்டு, இறங்கி பார்த்தபோது அவர்கள் வைத்திருந்த பை மாறி இருப்பதும், ஒரே நிறத்தில் இருந்ததால் மாற்றி எடுத்து சென்று இருக்கலாம் என்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவா பள்ளப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். மேலும் அவரிடம் பையில் இருந்த ஒரு சட்டை யில் டைலர் விலாசம் மற்றும் செல்போன் எண்ணை கொண்டு தீவட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மகிழ்ச்சி
இதன் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே போலீசார் குண்டுக்கல் ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி மூலம் பையை மாற்றி எடுத்து சென்ற மாதலிங்கத்தை பிடித்து அவரிடம் பேசி உள்ளனர். தொடர்ந்து மாதலிங்கம் அந்த பையை சோதனை செய்த போது அதில் தங்க நகைகள் இருப்பதை கண்டார். உடனே மாதலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி ஆகியோர் பையை எடுத்துக்கொண்டு தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
இதையடுத்து போலீசார் ஜீவாவிற்கு தகவல் கொடுத்தனர். தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு ஜீவா வந்தார். தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி செந்தில்குமார் மற்றும் பள்ளப்பட்டி போலீசார் முன்னிலையில் ஜீவா மற்றும் மாதலிங்கம் ஆகியோர் பையை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து ஜீவா பையை திறந்து பார்த்தார். அதில் வைத்திருந்த நகைகள் சரியாக இருந்ததையடுத்து மகிழ்ச்சி அடைந்தார். மேலும் அவர் மாதலிங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும் மாதலிங்கத்தின் செயலை போலீசார் பாராட்டி சால்வை அணிவித்து அவரை கவுரவித்தனர்.
பஸ்சில் 50 பவுன் நகையுடன் பையை மாற்றி எடுத்து சென்ற முதியவர் திரும்ப ஒப்படைத்த செயலை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.