தாறுமாறாக ஓடிய தனியார் பஸ்சில் இருந்து குதித்த முதியவர் சாவு

திருக்கோவிலூர் அருகே தாறுமாறாக ஓடிய தனியார் பஸ்சில் இருந்து குதித்த முதியவர் பரிதாபமாக இறந்தார். டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2023-06-10 18:45 GMT

திருக்கோவிலூர்

தனியார் பஸ்

விழுப்புரத்தில் இருந்து நேற்று காலை தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஏழுமலை என்பவர் பஸ்சை ஓட்டினார்.

திருக்கோவிலூர் 4 முனை சந்திப்பில் வந்ததும் பயணிகளை இறக்கிவிட்டு பஸ் மீண்டும் புறப்பட்டது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

பாதசாரிகள் ஓட்டம்

மேலும் சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள், சாலையோர சிறு வியாபாரிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். வாகன ஓட்டிகளும் சாலையை விட்டு விலகி பாதுகாப்பான இடம் நோக்கி சென்றனர். இதற்கிடையே திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் வந்தபோது தனியார் பஸ் அந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் மோதியது. இதில் கடையின் முன்பகுதி சேதம் அடைந்தது.

முதியவர் பலி

முன்னதாக பஸ் எங்கே சாலையோர கடையில் மோதிவிடப்போகிறதோ என்ற அச்சத்தில் பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் நின்று பயணம் செய்த திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த கவுஸ்பாஷா(வயது 60) என்பவர் பஸ்சில் இருந்து கீழே குதித்தார். பின்னர் இவர் பஸ்சின் பின்பக்கமாக கடந்து செல்ல முயன்றபோது செல்போன் கடையில் மோதிய வேகத்தில் பின்னோக்கி வந்த பஸ் கவுஸ்பாஷா மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர் சாலையில் கிடந்த கல் மீது விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

15 பேர் படுகாயம்

மேலும் செல்போன் கடையில் மோதிய பஸ் பின்னோக்கி வந்தபோது பின்னால் வந்த ஆட்டோ, இதற்கு பின்னால் வந்த தனியார் பஸ் ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக மோதின. இந்த விபத்தில் தனியார் பஸ் டிரைவர் ஏழுமலை, சிறுமி, மூதாட்டி உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

இதனிடையே விபத்தில் பலியான கவுஸ்பாஷா உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் பிரேக் திடீரென செயல் இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து கவுஸ்பாஷா மகன் அஷ்ரப் அலி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாறுமாறாக ஓடிய பஸ்சில் இருந்து குதித்த முதியவர் அதே பஸ் மோதி பரிதாபமாக இறந்ததோடு, பின்னால் வந்த ஆட்டோ, மற்றொரு தனியார் பஸ் அடுத்தடுத்து ஒன்றொடொன்று மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் திருக்கோவிலூரில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்