உப்பு படிந்த சில்வர் பானையுடன் கலெக்டர் அலுவலகம் வந்த முதியவரால் பரபரப்பு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு உப்பு படிந்த சில்வர் பானையுடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக வேப்பூர் அருகே வலசை கிராமத்தை சேர்ந்த அமரேசன்(வயது 60) என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது கையில் சில்வர் பானையுடன் வந்தார். அந்த பானையின் உள்ளே உப்பு படிந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அவர் மனுக்களை வாங்கிக்கொண்டிருந்த துணை ஆட்சியர்கள் ரவி, சங்கர், மனோகரன், மாவட்ட வழங்கல் அதிகாரி உதயகுமார் ஆகியோரிடம் அந்த பானையை காண்பித்து மனு அளித்தார். அந்த மனுவில், அவர் கூறியிருப்பதாவது:-
சிறுநீரகத்தில் கல்
எங்கள் கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராக வருகிறது. அந்த தண்ணீரை சுட வைத்து தான் குடிக்கிறோம். அவ்வாறு சுட வைக்கும் போது, பாத்திரத்தில் உப்பு படிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக எங்கள் பகுதியில் 35 பேருக்கு மேல் சிறுநீரகத்தில் கல் உருவாகி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றி உள்ளனர். சிலர் உயிரிழந்தும் வருகின்றனர்.
பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
இதை கருத்தில் கொண்டு எங்கள் பகுதியில் போடப்பட்ட சுத்திகரிப்பு எந்திரம் இது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. பூட்டியே உள்ளது. இதனால் நாங்கள் கேன் தண்ணீரை ரூ.35-க்கு வாங்கி குடித்து வருகிறோம். ஆகவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, எங்கள் பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது தவிர மாசடைந்த தண்ணீர் பாட்டிலையும் அதிகாரிகளிடம் காண்பித்தார். இந்த சம்பவத்தால் குறைகேட்பு கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.