கேரட் கொள்முதல் விலை உயர்வு
கேரட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி,
கேரட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கேரட் கொள்முதல் விலை
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, விதை, இடுபொருட்கள், உரங்களின் விலை ஏற்றம் மற்றும் வனவிலங்குகள் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கி கடன் பெற்று விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கேரட்டிற்கு கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலை கிடைத்து வருவதால், பெரும்பாலான விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தங்களது தோட்டங்களில் கேரட்டை பயிரிட்டனர். கேரட் பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. தற்போது கேரட் கொள்முதல் விலை கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.80 வரை தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கொள்முதல் விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ஒரு ஏக்கரில் கேரட் பயிரிட்டு, அறுவடை செய்ய தொழிலாளர் சம்பளம், விதை, உரம், மருந்து உள்ளிட்டவைகளுக்கு என ரூ.1½ லட்சம் செலவாகிறது. ஒரு ஏக்கரில் அறுவடை செய்தால் 60 முதல் 80 மூட்டைகள் கிடைக்கும்.
தற்போது தனியார் நிறுவனங்கள் விளைநிலங்களுக்கே வந்து நல்ல கொள்முதல் விலை தந்து, அவர்களே அறுவடை செய்து கேரட்டை கொண்டுச் செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு குறைகிறது. தற்போது போதுமான கொள்முதல் விலை கிடைப்பதால், கேரட் பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.