பள்ளி தாளாளரிடம் வருமானவரி அதிகாரி போல் நடித்து பணம் பறிக்க முயன்ற முன்னாள் ஊழியர் கைது
கரூர் அருகே பள்ளி தாளாளரிடம் வருமானவரி அதிகாரி போல் நடித்து பணம் பறிக்க முயன்ற முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பள்ளியில் ஆய்வு
கரூர் அருகே காக்காவாடி பகுதியில் அட்ரியன் லாயல் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக கரூர் செங்குந்தபுரம் எல்.ஜி.பி. நகரை சேர்ந்த ரகுபதி (வயது 53) என்பவர் உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் முதியவர் ஒருவர் கார் மூலம் பள்ளிக்கு வந்தார். பின்னர் தான் வருமானவரித்துறை அதிகாரி என கூறி பள்ளியின் அலுவலக அறைக்கு சென்று பள்ளியின் வரவு, செலவு கணக்கு மற்றும் வருகை பதிவேடு, பள்ளியில் கட்டிடம் கட்டுவதற்கான செலவு தொகை உள்ளிட்ட நோட்டுகளை ஆய்வு செய்தார்.பின்னர் அங்கிருந்து கிளம்பி கரூர் காந்தி கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் தாளாளர் இருக்கிறாரா? என்று விசாரித்துள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் தாளாளர் இல்லை என்று கூறியதும், அங்கிருந்து கிளம்பி கார் டிரைவரிடம் நாமக்கல் செல் என்று கூறி நாமக்கல் நோக்கி சென்றுள்ளார்.
ரூ.15 ஆயிரம் கேட்டார்
அப்போது ஏற்கனவே ஆய்வு செய்த காக்காவாடி பள்ளி தாளாளர் ரகுபதியை போன் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் பள்ளி ஆவணங்களில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டி, ரூ.15 ஆயிரம் கேட்டுள்ளார்.இதனையடுத்து பள்ளியின் தாளாளர், பள்ளிக்கு வந்தவர் வருமானவரித்துறை அதிகாரி தானா? என்ற சந்தேகத்தின் பேரில், கரூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வருமானவரித்துறை சோதனை எதுவும் கரூரில் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
முதியவர் கைது
இதனையடுத்து போலீசார் பள்ளி தாளாளர் ரகுபதியிடம், அந்த நபரை தொடர்பு கொண்டு மாலையில் வந்தால் பணம் தருவதாக கூற சொல்லி உள்ளனர். அதன்படி பள்ளி தாளாளரும், அந்த நபரிடம் மாலை நேரத்தில் வந்தால் பணம் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய, பணம் கேட்டவரும் மாலையில் காக்காவாடி பகுதிக்கு பணம் வாங்க வந்துள்ளார்.அப்போது அங்கிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கற்பகம் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (73) என்பதும், இவர் ஏற்கனவே வருமான வரித்துறையில் என்ஜினீயரிங் டெக்னிக்கல் கிரேட்-2 ஆக பணியாற்றி 2005-ல் ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.