ஆத்தூர் அருகே சாவிலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு அடுத்தடுத்து 2 பேரும் உயிரிழந்ததால் சோகம்

ஆத்தூர் அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் பரிதாபமாக இறந்தார். அடுத்தடுத்து 2 பேரும் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-16 20:09 GMT

ஆத்தூர்,

கணவன்- மனைவி

ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சி 8-வது வார்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 60). இவருடைய மனைவி சின்னம்மாள் (55). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சின்னம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக பல்வேறு இடங்களுக்கு மனைவியை அழைத்து சென்று கலியபெருமாள் சிகிச்சை அளித்து வந்தார். தனக்கு மனைவியும், மனைவிக்கு தானும் என இருவரும் வயதான காலத்திலும் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

திடீர் சாவு

இதற்கிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த சின்னம்மாள் நேற்று காலை 9 மணி அளவில் திடீரென இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கலியபெருமாள் அப்படியே சோகத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார். மனைவியை நினைத்து அழுதவாறு இருந்தார். சின்னம்மாள் இறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

சோகத்துடன் அழுது கொண்டிருந்த கலியபெருமாள் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் துக்க வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய உறவினர்கள் 2 பேர், கலியபெருமாளை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

கணவரும் இறந்தார்

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கலியபெருமாளும் இறந்தார். உடனே உறவினர்கள் அவரது உடலை அப்படியே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தனர். இதனை அறிந்த உறவினர்கள் கணவன்- மனைவி இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்த சம்பவம் அறிந்த பைத்தூர் கிராம மக்கள் சோகம் அடைந்தனர். கணவன்- மனைவி இருவரும் அடுத்தடுத்து சில மணி நேரத்தில் உயிரிழந்ததால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் அடக்கம்

பின்னர் கலியபெருமாள் உடலையும் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர்.

கணவன்- மனைவி இருவரது உடல்களையும் நேற்று மாலை 7 மணி அளவில் அருகருகே ஒரு நேரத்தில் அடக்கம் செய்தனர். சாவிலும் இணைபிரியாத தம்பதியால் பைத்தூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Tags:    

மேலும் செய்திகள்