கமிஷனுக்கு ஆசைப்பட்டு ரூ.6 லட்சத்தை இழந்த என்ஜினீயர்

அதிக கமிஷன் தருவதாக ஆசைவார்த்தை கூறி கோவை என்ஜினீயரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-29 23:15 GMT

கோவை,

அதிக கமிஷன் தருவதாக ஆசைவார்த்தை கூறி கோவை என்ஜினீயரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

என்ஜினீயர்

கோவை பி.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 29). என்ஜினீயர். இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த 8-ந் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. இதில் எனது பெயர் தேவிகா என்றும், தான் தேவிகா ஏ.ஜெ. என்ற பெயரில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் அதில் யூடியூப்பர்களுடன் சேர்ந்து தான் வேலை செய்வதாகவும், அவர்களுக்கு சந்தாதாரர்களை அதிகரிக்க மார்க்கெட்டிங் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் டெலிகிராம் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தான் அனுப்பும் விளம்பர வீடியோக்களை பார்த்து, அதனை ஸ்கிரீன் சாட் எடுத்து அனுப்பினால் குறிப்பிட்ட தொகை கமிஷன் தருவதாக வாட்ஸ்-அப் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

கமிஷன் தொகை

இதனை நம்பிய ஹரிபிரசாத், அந்த லிங்கில் உள்ள டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்தார். பின்னர் 10 விளம்பர வீடியோக்களை பார்த்து அதனை ஸ்கீரின் ஷாட் எடுத்து, அந்த எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினார். இதையடுத்து அந்த பெண் ஹரிபிரசாத்தின் வங்கி கணக்கை பெற்று ரூ.150 அனுப்பியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அடுத்த கட்ட டாஸ்க்குக்கு செல்ல வேண்டும் என்றால் மற்றொரு பெண் உங்களை டெலிகிராம் மூலம் தொடர்பு கொள்வார் என்று ஹரிபிரசாத்துக்கு குறுஞ்செய்தி வந்தது.

இதையடுத்து ஹரிபிரசாத்துக்கு மற்றொரு பெண் குறுஞ்செய்தி அனுப்ப தொடங்கினார். அவர் தான் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினால், அதிக கமிஷன் கிடைக்கும் என்று கூறினார். இதனை நம்பிய ஹரிபிரசாத் ரூ.2000 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு கமிஷனுடன் சேர்த்து ரூ.2,800 திருப்பி அனுப்பப்பட்டது.

ரூ.6 லட்சம் மோசடி

இதனால் அதிக கமிஷன் தொகை கிடக்கும் என்ற ஆசையில் ஹரிபிரசாத் கடந்த 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தவணை முறையில் பல கட்டங்களாக ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 200-யை அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் அதற்கான கமிஷன் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் இழந்த பணத்தை பெறுவதற்காக அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஹரிபிரசாத் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கோவை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்