நண்பர்களிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி இழந்த என்ஜினீயர்

கோவையில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-12-15 18:45 GMT

கோவையில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

என்ஜினீயர் தற்கொலை

கோவை உப்பிலிபாளையம் ஆர்.வி.எல்.நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 29) என்ஜினீயர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கோவை ராம்நகரில் உள்ள ஓட்டல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காட்டூர் போலீசார் உடலை மீட்டு அறையில் இருந்து சங்கர் எழுதிய ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாலும், அதிக அளவு கடன் இருந்ததாலும் தற்கொலை செய்து கொள்வதாகவும் அதில் எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்

என்ஜினீயர் சங்கர், சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் முதலில் ஈடுபட்டபோது சிறிய தொகை கிடைத்துள்ளது.

அதன்பிறகு சூதாட்டத்திற்கு அடிமையாகி பெரிய தொகையை இழக்க தொடங்கினார்.

அதன்பின்னர் கோவை வந்த அவ்ர தனது நண்பர்களிடம் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். நண்பர்கள் கடனை திரும்ப கேட்டபோது கொடுக்கமுடியவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

2 முறை தற்கொலை முயற்சி

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரளா சென்று அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் மனம் மாறி கோவை திரும்பியுள்ளார்.

தொடர்ந்து மனஉளைச்சலுடன் இருந்த அவர் ஊட்டிக்கு சென்று ஓட்டலில் அறை எடுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கோவை காட்டூரில் ஓட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளாார்.

தற்கொலை செய்த சங்கர் குறித்து அவரது நண்பர்கள் கூறும்போது, "சங்கர் பொதுநலச்சேவையில் அக்கறையுடன் செயல்படுவார்.

ஐதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் வேலை செய்து தற்போது வெளிநாடு செல்ல நுழைவுதேர்வு எழுதி இருந்தார்.

இந்த நிலையில் சங்கர் இறந்ததாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது" என்று சோகத்துடன் தெரிவித்தனர். சங்கரின் தற்கொலை குறித்து காட்டூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்