மின் ஊழியர் உடலை பெற்றுச்சென்றனர்

மின்வாரிய ஊழியர் உடலை வாங்க மறுத்து 3 நாளாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து உடலை பெற்றுச்சென்றனர்

Update: 2022-10-06 18:45 GMT

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆம்பூரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 50). இவர் ஆழ்வார்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி, மின்பழுதை சரி செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ராமசாமியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கடந்த 3-ந்தேதி இரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ராமசாமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 3-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் தொழிலாளர்களும் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மின்வாரிய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ராமசாமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக குறிப்பிட்ட தொகையை உடனடியாக வழங்குவது என்றும், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வது என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வாரிய பணி வழங்க மனு கொடுக்கும் பட்சத்தில் அதனை பரிசீலனை செய்து வாரிய தலைமைக்கு அனுப்புவது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள், தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் இருந்த ராமசாமியின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்