ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மின் சக்தியில் இயங்கும் ஆட்டோ

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மின் சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். ஒரு கி.மீ. தூரம் செல்வதற்கான கட்டணம் ரூ.12 தான்.

Update: 2022-11-09 20:55 GMT

ஆலந்தூர்,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பயணிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து தங்கள் பணி இடங்களுக்கு செல்வதற்கான பல்வேறு இணைப்பு வாகன வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த இணைப்பு சேவை வசதிகளில் தற்போது சிற்றுந்து (மினி பஸ்) சேவை மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக பல்வேறு மெட்ரோ ரெயில் நிலையங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் கூடுதலாக எம்.ஆட்டோ பிரைடு என்ற மின்னியங்கி 3 சக்கர வாகன இணைப்பு சேவையை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கிவைத்தார்.

இதில் முன்னாள் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ் சதுர்வேதி, எம்.ஆட்டோ குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மன்சூர் அல் புஹாரி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒரு கி.மீ. செல்ல ரூ.12 கட்டணம்

எம்.ஆட்டோ பிரைட் முழுமையாக மின்சார சக்தியில் இயங்கும் முதல் 3 சக்கர வாகனமாகும். இதனை செயலி மூலம் பயன்படுத்தி, மின்னணு முறையில் பணத்தை செலுத்தலாம். நேரடியாகவும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொடக்க சலுகையாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.12 என்ற கட்டணத்தில், இந்த சேவை முதல் கட்டமாக அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைப்பு சேவை வசதியை மெட்ரோ பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்