சமயபுரத்தில் வாடகை வீட்டில் இருந்து காலி செய்ததால் ஆதரவின்றி சுற்றித்திரிந்த மூதாட்டி

சமயபுரத்தில் வாடகை வீட்டில் இருந்து காலி செய்ததால் ஆதரவின்றி மூதாட்டி சுற்றித்திரிந்தார்.

Update: 2022-11-01 20:20 GMT

சமயபுரம் அருகே உள்ள கல்பாளையம் ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் கல்கி (வயது 75). இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் இவர் மகன் கவனிக்காததால் ஆதரவின்றி சுற்றித்திரிந்த அவர் சமயபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக மூதாட்டிக்கு ஏதேனும் நடந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், தன்னை மகன் கவனிக்கவில்லை என்றாலும் தான் சேர்த்து வைத்த பொருட்களை மகனிடம் ஒப்படைக்க நினைத்த மூதாட்டி இது குறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியாபானு மற்றும் போலீசார் மூதாட்டியின் மகன் மாரிமுத்துவை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து மூதாட்டியிடம் பேசிய போலீசார் மகனுடன் செல்லுங்கள் என்று கூறிய போது, `என்னால் மகன் கஷ்டப்பட வேண்டாம், நான் கஷ்டப்பட்டு சேர்த்த பொருளை அவன் அனுபவித்தால் அதுவே எனக்கு போதும்' என்று கூறியுள்ளார். மூதாட்டி மகன் மீது வைத்துள்ள பாசத்தை நினைத்து நெகிழ்ந்த போலீசார், மாரிமுத்து மற்றும் அவரது மனைவி புஷ்பவள்ளிக்கு அறிவுரை கூறி மூதாட்டியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.இதைத்தொடர்ந்து மூதாட்டி கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றியை தெரிவித்து சென்றார். இந்த காட்சி அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்