வயதான தம்பதியை வெட்டிக்கொன்று நகை-பணம் கொள்ளை

வயதான தம்பதியை வெட்டிக்கொன்று நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-01-31 22:46 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 75). விவசாயி. இவரது மனைவி மாக்காயி(70). இவர்களுக்கு மாக்காயி(53), காந்தி (50), செல்வாம்பாள் (48), சரோஜா (43) என 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி, அதே ஊரில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

மாணிக்கம், மாக்காயி ஆகியோர் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். வழக்கமாக மூதாட்டி மாக்காயி காலையிலேயே எழுந்து வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிடுவது வழக்கம். ஆனால் நேற்று அவரது வீட்டு வாசலில் தண்ணீர் தெளிக்காமலும், கதவு திறந்த நிலையிலும் இருந்துள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

ரத்த வெள்ளத்தில்...

அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் மாணிக்கமும், மாக்காயியும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் தரைப்பகுதி மற்றும் சுவர்ப்பகுதியில் ரத்தம் தெறித்த நிலையில் இருந்தது. பீரோ திறந்து கிடந்தது. மேலும் அங்கு வந்த மாணிக்கத்தின் மகள்கள், தங்களது பெற்றோரின் உடல்களை கண்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி மற்றும் வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

வெட்டிக்கொலை

முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மாக்காயி கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கலியை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அதை தடுக்க முயன்று தாலிச்சங்கிலியை இறுகப்பற்றியுள்ளார். இதில் 7 பவுன் தாலிச்சங்கிலி அறுந்து தாலிக்குண்டு உள்ளிட்ட 1 பவுன் மாக்காயியிடமும், கருகமணி உள்பட 6 பவுன் சங்கிலி மர்ம நபர்களின் கையிலும் சிக்கியுள்ளது. மேலும் மாணிக்கம், மாக்காயி ஆகியோரை மர்ம நபர்கள் வீட்டிற்குள்ளேயே துரத்தி, துரத்தி அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக, கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் வீட்டில் மிளகாய் பொடியை தூவிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர், என்பது போலீசாருக்கு தெரியவந்தது. மொத்தம் எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

போலீசார் விசாரணை

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்த மர்ம நபர்கள், அதை தடுக்க முயன்றதால் தம்பதியை கொலை செய்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக தம்பதியை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றனரா? அல்லது உறவினர்கள் யாரேனும் நகை, பணத்துக்காக கொலை செய்தனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்