கூட்டுறவு வங்கி காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி

குடியாத்தத்தில் கூட்டுறவு வங்கி இரவு காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-06 18:14 GMT

எரித்து கொல்ல முயற்சி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை ஜே.சி.செட்டி தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளை உள்ளது. இங்கு இரவு காவலாளியாக குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த பாபு (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார். இரவு நேரத்தில் அங்கேயே தூங்குவது வழக்கம்.

நேற்று அதிகாலை சுமார் இரண்டு மணி அளவில் பாபு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார். அப்போது பெட்ரோல் வாடை வந்துள்ளது. சிறிது நேரத்தில் அவர் கட்டி இருந்த கொசுவலை தீப் பிடித்து எரிந்துள்ளது. இதனால் பதறியடித்து அவர் அங்கிருந்து வெளியே வந்து உயிர்த்தப்பினார். ஆனாலும் அவரது கை, காலில் சிறு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

அப்போது அப்பகுதியில் இருந்து மர்மநபர் ஒருவர் ஓடி உள்ளார். இது குறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அதற்குள் அந்த மர்ம நபர் தப்பிச்சென்றுவிட்டார்.

இதனை தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் மர்மநபர் ஒருவர் காவலாளி பாபு தூங்கிக் கொண்டிருக்கும் இடம் அருகில் வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டு கையில் வைத்திருந்த பெட்ரோலை பாபு தூங்கிக் கொண்டிருந்த இடத்தில் ஊற்றி தீ வைத்துள்ளார். அதில் கொசுவலை எரிந்த காட்சி பதிவாகி இருந்தது.

பழைய குற்றவாளி

இது குறித்து உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கூட்டுறவு வங்கி காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற நபர் குடியாத்தம் பிச்சனூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த சோபன்பாபு (40) என தெரியவந்தது. இவர் மீது இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடுதல், மோட்டார்சைக்கிள் திருட்டு, ஆளில்லாத சமயத்தில் கடைகளில் புகுந்து திருடுவது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ளது. இந்த வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சென்று திரும்பியதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சோபன்பாபு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பரபரப்பு தகவல்கள்

சோபன்பாபு அடிக்கடி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் போலீசார் சோபன்பாபுவை தேடி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோபன்பாபு குறித்து வங்கி காவலாளி பாபு தகவல் கொடுத்ததாக சிலர் கூறியுள்ளனர். இதனால் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

வங்கி காவலாளியை தீ வைத்து கொல்ல முயன்ற கண்காணிப்பு கேமராக்களின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்