முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
பேரணாம்பட்டு நகராட்சியில் நடந்த பணிகளில் நடத்துள்ள முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பேரணாம்பட்டு நகராட்சியில் நடந்த பணிகளில் நடத்துள்ள முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நகராட்சி கூட்டம்
பேரணாம்பட்டு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் பிரேமா தலைமையில் நேற்று காலை நடந்தது. துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத், நகராட்சி ஆணையாளர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
முறைகேடு
அப்துல் ஹமீத் (சுயே)- ஒப்பந்ததாரர்கள் 2 பேரும் சேர்ந்து ரூ.16 லட்சம் செலவில் கமிஷனர் அறை, மன்ற கூடம், தலைவர் அறை ஆகியவற்றில் எலெக்ட்ரிக் வேலை, டைல்ஸ் ஒட்டும் பணிகள் செய்துள்ளதாக பில் போடப்பட்டுள்ளது. ஆனால் அவ்வளவு பணிகள் நடக்கவில்லை. இதில் முறை கேடு நடந்துள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அக்டோபர், நவம்பர் மாதங்களில் ரூ.3 லட்சத்திற்கு பிளீச்சிங் பவுடர் வாங்கியிருக்கும் போது, திரும்பவும் எதற்கு ரூ.5 லட்சத்திற்கு பிளீச்சிங் பவுடர் என தனியாக பில் வைக்கிறீர்கள்
துணை தலைவர் ஆலியார்ஜூ பேர் அஹம்மத்- வாங்கியதற்குதான் தான் பில் வைத்துள்ளோம். இப்போது கூட துப்புறவு பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வந்துள்ளது. அடுத்த முறை நீங்கள் எல்லோரும் பார்த்த பிறகு பில்லை பாஸ் செய்யலாம்.
ஆக்கிரமிப்பு
அதீகுர் ரஹ்மான் (சுயே) - எனது வார்டில் உள்ள உருது தொடக்க பள்ளி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. சாலையில் நிறைய வாகனங்கள் செல்வதால் பள்ளி குழந்தைகள் நலனை கருதி பள்ளிக்கான இடத்தை மாற்றியமைக்க வேண்டும். அரசு புறம்போக்கு இடத்தை ரியல் எஸ்டேட் உரிமையாளர் பிடித்து வைத்துள்ளார். இந்த இடத்தை மீட்டு பள்ளிக் கட்டிடம் கட்ட வேண்டும்.
முஜம்மில் அஹம்மத் (காங்கிரஸ்)- பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும். அந்த கடைகளுக்கு மின்சாரம் நகராட்சி கட்டண கழிப்பிடத்திலிருந்து செல்கிறது. மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
கூச்சல்குழப்பம்
அப்துல் ஹமீத் (சுயே)- துணைத் தலைவர், உறுப்பினர்களோடு கீழே தான் அமர வேண்டும் என கூறினார். இதனால் உறுப்பினர்களிடையே கடுமையான விவாதங்கள் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியது.
அதைத்தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும், கூட்டம் முடிந்ததாகவும் தலைவர் கூறிவிட்டு சென்றார்.
அப்துல் ஹமீத் (சுயே), சுல்தான் (மனித நேய மக்கள் கட்சி),
அப்துல் ஜமீல் (தி.மு.க.) ஆகியோரும் பேசினர்.