மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் வழங்கும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க ரூ.2 கோடி கூடுதல் நிதி

மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலமாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத் தொகை உள்ளிட்ட உதவித் தொகைகளை உயர்த்தி வழங்குவதற்காக கூடுதலாக ரூ.2 கோடி நிதியை ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-07-24 20:52 GMT

சென்னை,

2023-2024-ம் நிதியாண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடரில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித்தொகைகளை உயர்த்தி கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் சுமார் 10.11 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்களாக பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.3.29 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கும் கல்வி உதவித்தொகை, மருத்துவ சிகிச்சை, கல்வி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் இவ்வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

விபத்து நிவாரணம்

2007-ம் ஆண்டில் இருந்து உதவித் தொகை உயர்த்தப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பை செயல்படுவதற்கு ஏதுவாக கூடுதல் நிதியாக ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்வதோடு, இந்த நிதியாண்டுக்கு இதற்காக மொத்தம் ரூ.5.29 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று அரசை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரது கோரிக்கையை அரசு பரிசீலித்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நல வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித்தொகைகளை 2023-2024-ம் நிதியாண்டு முதல் உயர்த்தி வழங்குவதற்கு ஏதுவாக, கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இனிமேல், மாற்றுத்திறனாளிகள் விபத்தினால் இறந்தால் வழங்கப்பட்டு வந்த ரூ.1 லட்சம் இனி ரூ.2 லட்சமாகவும்; கை அல்லது கால் இழப்பு, இரு கண்பார்வை இழந்தால் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும்; நிரந்தர குறைபாடுகளைத் தவிர்த்து மருத்துவ செலவினம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

கல்வி உதவித் தொகை

ஆல்பா படுக்கை வாங்க ரூ.6 ஆயிரமும்; 10-ம் வகுப்பில் இருந்து முதுகலை பட்டம் வரை படிக்கும் மாற்றுத்திறனாளிகளின் மகன், மகளுக்கான கல்வி உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்