மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு
மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க.பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மதுரை,
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் விமானம் மூலம் மதுரை சென்றார். விமான நிலைய உள்வளாகத்தில் அவர் இறங்கிய பின்னர், அங்கிருந்து வெளியே வருவதற்காக சிறிய பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பஸ்சில் எடப்பாடி பழனிசாமி நின்றபடி பயணம் செய்தபோது, பஸ்சில் அவருடன் பயணித்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ராஜேஸ்வரன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டார்.
அவர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி வீடியோ எடுத்துக்கொண்டே எதிர்ப்பு கோஷமிட்டார். உடனே, பஸ்சில் வந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், வீடியோ எடுத்தவரை தடுத்தார். இந்த விவகாரம் சர்ச்சையானது. மேலும், இதுசம்பந்தமான வீடியோவும் வலைத்தளங்களில் பரவியது.
இதற்கிடையே ராஜேஸ்வரன் அவனியாபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில், அவரது பாதுகாவலர் மற்றும் சிலர் என்னை தாக்கியதுடன் செல்போனையும் பறித்துச் சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு
மேலும் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் மீது ஆபாசமாக தரக்குறைவாக பேசுதல், தாக்க முயற்சி என்ற இருபிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் ராஜேஸ்வரன் அளித்த புகாரின்பேரில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மணிகண்டன், எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் அரவிந்தன் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி தாக்குதல், செல்போன் பறிப்பு, காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.