ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் பொதுமக்கள் அவதி

Update: 2023-02-27 17:13 GMT


குண்டடம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

விபத்துகள்

கோவை-மதுரை நெடுந்தூரம் செல்லும் மார்க்கத்தில் குண்டடம் மேட்டுக்கடை ஆகிய ஊர்கள் மெயின் ரோட்டில் அமைந்துள்ளதால் இங்கு பெட்ரோல் பங்குகள், திருமண மண்டபங்கள், தனியார் கம்பெனிகள், நூல் மில்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் கரூர், கோவை, மதுரை, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு செல்ல அதிகப்படியான மக்கள் வந்து செல்கின்றனர்.

நெடுந்தூரம் மார்க்கம் என்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடைபெற்று வருகிறது. கிராம பகுதிகளில் பெண்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் குண்டடம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வந்தது.

ஆம்புலன்ஸ் சேவை

தற்போது 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் விபத்து நடந்தால் தாராபுரம், கொடுவாய் போன்ற ஊர்களில் இருந்து ஆம்புலன்ஸ் வர வேண்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் இடையபட்டியை சேர்ந்த சக்கரபாணி மற்றும் அவரது மனைவி பத்மாவதி இருவரும் இருசக்கர வாகனத்தில் ரோட்டை கடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக கார் ஒன்று மோதியது. இதில் அவருக்கு இடது கால் முறிந்தது. பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் 108 ஆம்புலன்ஸ் சுமார் ஒரு மணி நேரம் கழித்து தான் வந்தது. பின்னர் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் கோர விபத்துகள் நடைபெற்று உயிருக்கு போராடிய நிலையில் இருக்கும்போது காப்பாற்றப்பட வேண்டிய உயிர்கள் கூட ஆம்புலன்ஸ் தாமதமாக வருவதால் காப்பாற்ற முடியாமல் சம்பவ இடத்திலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் குண்டடம் பகுதிக்கு உடனடியாக மீண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்