கொரோனா தொற்றால் மரணம் அடைந்த ரேஷன் கடை விற்பனையாளர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் நிதிஉதவி-கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 360 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றால் மரணம் அடைந்த 2 ரேஷன் கடை விற்பனையாளர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் நிதிஉதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.