மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்-கலெக்டர் அம்ரித் பேச்சு

மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று நூலகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் அம்ரித் பேசினார்.

Update: 2023-08-13 18:45 GMT

விழாவில் கலெக்டர் அம்ரித் பெண் ஒருவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.

ஊட்டி: மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று நூலகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் அம்ரித் பேசினார்.

புத்தக வாசிப்பு

பொது நூலகத்துறை சார்பில், நூலகத்தந்தை டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதனின் 131-வது பிறந்த நாள் விழா நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, புத்தக திருவிழாவில் சிறப்பாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த மற்றும் அரங்குகள் அமைத்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்கள் இடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் போட்டி தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அறிவுசார் மையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஊட்டி காந்தல் பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த அறிவுசார் மையத்திற்கு அரசு மூலம் 1,500 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

20 ஆயிரம் புத்தகங்கள்

இந்த மையம் நகரின் மையப்பகுதியில் அமைய உள்ளதால், அதிகமான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் 20,000 புத்தகங்கள் வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு, சமூக பொறுப்பு நிதியில் இருந்து புத்தகங்கள் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. போட்டி தேர்வுகள் எழுதுபவர்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த மையம் அமையும். எனவே, மாணவர்கள் தினந்தோறும் புத்தக வாசிப்பு பழக்கத்தை மேற்கொண்டு, குறைந்தபட்சம் ஒரு பக்கத்தையாவது படிக்க வேண்டும். செல்போன் பயன்பாட்டினை குறைத்துக்கொண்டு, தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) வசந்தமல்லிகா, பாலகொலா வாசகர் வட்ட தலைவர் மஞ்சைமோகன், மாவட்ட மைய நூலக வாசக வட்ட தலைவர் அமுதவல்லி, பந்தலூர் வாசகர் வட்ட தலைவர் ஜெய்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்