கடலூர் துறைமுகம்ராமனாதீஸ்வர சவுடாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்திரளான பக்தர்கள் தரிசனம்
கடலூர் துறைமுகம் ராமனாதீஸ்வர சவுடாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வீரபத்திர சுவாமி
கடலூர் துறைமுகத்தில் வீரபத்திர சுவாமி கோவில் என்கிற பர்வதவர்த்தினி ராமனாதீஸ்வர சவுடாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்ததையடுத்து கடந்த 22-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து தனபூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 23-ந் தேதி மாலை அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் மற்றும் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக நாளான நேற்று காலை 4-ம் கால யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து மகா அஸ்த்ர ஹோமம், பூர்ணாகுதி, யாத்ரா தானம் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடந்தது.