தர்மபுரியில் 2 இடங்களில் செயல்படுகிறது: ஏழை, எளியவர்களின் பசிபோக்கும் மலிவு விலை அம்மா உணவகங்கள்-சேவைகளை மேம்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
தர்மபுரி:
ஏழை, எளியவர்களின் பசிபோக்கும் வகையில் தர்மபுரியில் செயல்படும் 2 அம்மா உணவகங்களின் சேவையை மேம்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்மா உணவகங்கள்
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் மலிவு விலையில் நிறைவாக உணவு உட் கொள்ள வேண்டும். வயிறார அவர்கள் பசியை போக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தொடங்கப்பட்டது தான் அம்மா உணவகம்.
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் இந்த திட்டம் கடந்த 2013-ம் ஆண்டு முதன்முதலில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த திட்டத்தால் ஏழை, எளியவர்கள் ஏராளமானோர் பயன்பெற்றனர்.
தர்மபுரி மாவட்டம்
இதையடுத்து தமிழகத்தின் பிற மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தர்மபுரி பஸ் நிலையம், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தர்மபுரியில் செயல்படும் 2 அம்மா உணவகங்களில் வாரத்தில் 5 நாட்கள் காலை 7 மணி முதல் ரூ.1-க்கு இட்லி வழங்கப்படுகிறது. புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் ரூ.5-க்கு பொங்கல் வழங்கப்படுகிறது. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை 2 விதமான சாதங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் தயிர் சாதம் ரூ.3-க்கு வழங்கப்படுகிறது. பிற வகை சாதங்களில் ஏதேனும் ஒன்று ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெரைட்டி சாதங்கள்
ஞாயிற்றுக்கிழமை குஸ்கா, திங்கட்கிழமை சாம்பார் சாதம், செவ்வாய்க்கிழமை தட்டைப்பயறு சாதம், புதன்கிழமை தக்காளி சாதம், வியாழக்கிழமை தட்டைப்பயறு சாதம், வெள்ளிக்கிழமை புளி சாதம், சனிக்கிழமை சாம்பார் சாதம் ஆகியவை மதிய நேரங்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தர்மபுரி பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து வந்து செல்பவர்கள், தர்மபுரி நகர பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்களுக்கு இந்த அம்மா உணவகங்கள் மிகவும் பயனளிக்கின்றன.
அர்ப்பணிப்பு உணர்வோடு
அம்மா உணவக ஊழியர் கலைச்செல்வி கூறியதாவது:-
தர்மபுரியில் அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு ஷிப்டுக்கு 4 பேர் என்ற அடிப்படையில் 2 ஷிப்டுகளில் பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் உணவு சமைக்க தரமான மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கப்படுகின்றன. அவற்றை சுகாதாரமான முறையில் சமைத்து பொதுமக்களுக்கு வழங்குகிறோம். உணவு தரமானதாகவும், சுவையானதாகவும் இருக்க அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
அம்மா உணவக ஊழியர் அம்சா கூறியதாவது:-
அம்மா உணவகத்தில் முதல் ஷிப்டில் அதிகாலை 4 மணி முதல் சமையல் பணியை தொடங்குகிறோம். உணவக வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கிறோம். இங்கு உணவு சாப்பிட வருபவர்களை கனிவுடன் அணுகி உணவை வழங்குகிறோம். மதிய நேரங்களில் இங்கு வரும் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய 2-வது ஷிப்டில் மாலை 4 மணி வரை உணவு வழங்கும் பணியை மேற்கொள்கிறோம்.