அமித்ஷா இன்று சென்னை வருகை: வேலூர் பொதுக்கூட்டத்தில் நாளை பேசுகிறார்

நாடாளுமன்ற தேர்தல் வியூகமாக, தென்சென்னை பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வகையில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். வேலூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று அவர் பேசுகிறார்.

Update: 2023-06-09 23:15 GMT

சென்னை,

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை அனைத்து அரசியல் கட்சிகளுமே உன்னிப்பாக உற்றுநோக்கி வருகின்றன. பா.ஜ.க.வை பொறுத்தவரையில் தேர்தல் களப்பணியில் இப்போதே தீவிரமாக களமிறங்கி விட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். அந்த சதுரங்க விளையாட்டில் இப்போதே காய்களை நகர்த்த தொடங்கியிருக்கிறார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கைகோர்த்துள்ள பா.ஜ.க., இம்முறை குறிப்பிடத்தக்க இடங்களில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறது. அந்த பட்டியலில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியும் அடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமித்ஷா சென்னை வருகை

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தென்சென்னை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கலந்துரையாட அமித்ஷா சென்னை வருகிறார்.

இதையொட்டி, மராட்டியத்தில் இருந்து இன்று இரவு 8.45 மணிக்கு அமித்ஷா சென்னைக்கு விமானத்தில் வருகிறார். விமான நிலையத்தில் அமித்ஷாவுக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு அமித்ஷா செல்கிறார். அங்கு இரவு தங்குகிறார்.

பின்னர் நாளை (ஞாயிறு) காலை 9.05 மணிக்கு, அமித்ஷாவை பல்வேறு தரப்பை சேர்ந்த 25 முக்கிய பிரமுகர்கள் ஓட்டலில் சந்தித்து பேசுகிறார்கள். பா.ஜ.க.வின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து அவர்களுடன் அமித்ஷா கலந்துரையாடுகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அமித்ஷாவை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வேலூர் பொதுக்கூட்டம்

பின்னர் காலை 11.25 மணிக்கு ஓட்டலில் இருந்து அமித்ஷா புறப்பட்டு, சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள ராணி மகாலுக்கு காலை 11.40 மணிக்கு வருகிறார். அங்கு 1 மணி நேரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். இந்த சந்திப்புக்கு பின்னர் மீண்டும் கிண்டி ஓட்டலுக்கு திரும்புகிறார்.

மதிய உணவுக்கு பின்னர், ஓட்டலில் இருந்து புறப்பட்டு அமித்ஷா பிற்பகல் 1.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து வேலூர் நோக்கி ஹெலிகாப்டரில் செல்கிறார். பிற்பகல் 2.30 மணிக்கு வேலூர் விமான நிலையம் சென்றடையும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக பள்ளிக்கொண்டாவில் உள்ள காந்தனேரிக்கு வருகிறார். அங்கு நடக்கும் பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

ஆந்திராவுக்கு...

பின்னர் மீண்டும் வேலூரில் இருந்து சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் வரும் அவர், மாலை 5.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நோக்கி விமானத்தில் புறப்படுகிறார். அங்கு வால்டையர் ரெயில்வே கிரவுண்ட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். அந்த நிகழ்ச்சி முடிந்து சாலை மார்க்கமாகவே போர்ட் கெஸ்ட் ஹவுஸ்-க்கு வருகிறார்.

இரவு உணவுக்கு பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாகவே வுடா குழந்தைகள் தியேட்டர் பகுதிக்கு செல்கிறார். அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் இரவு 9.25 மணிக்கு விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்படுகிறார்.

பா.ஜ.க.வின் உற்சாகம்

அமித்ஷாவின் தமிழக பயணம் முழுவதும் மாநில தலைவர் அண்ணாமலையும் உடனிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி அமித்ஷாவின் இந்த தமிழக பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் - தொண்டர்கள் மத்தியிலும், பொதுக்கூட்டங்களிலும் அவர் என்ன பேச போகிறார்? என்பதை அனைத்து தரப்பினருமே உற்றுநோக்கி வருகிறார்கள்.

அமித்ஷாவின் வருகையையொட்டி, தமிழக பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளையும் திட்டமிட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்