ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு இடையேபள்ளிக்கூடத்தில் மாணவ- மாணவிகளை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு இடையேயும் பள்ளிக்கூடத்துக்கு சென்று மாணவ- மாணவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்தார்.

Update: 2023-02-10 20:55 GMT

ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு இடையேயும் பள்ளிக்கூடத்துக்கு சென்று மாணவ- மாணவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்தார்.

தேர்தல் பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதுடன், அவரது வெற்றிக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் பலரும் ஈரோட்டிலேயே முகாம் அமைத்து தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். அவர் நேற்று முன்தினம் ஈரோடு காவிரிக்கரை பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் அங்கு சென்றபோது காவிரிக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கிக்கொண்டு இருந்தது.

அமைச்சர் பள்ளிக்கு சென்றார்

பள்ளிக்கூடத்தை பார்த்ததும் உற்சாகம் அடைந்த அமைச்சர், பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தார். அங்கு சென்று பள்ளிக்கூட குழந்தைகளை சந்தித்து அன்புடன் பேசினார். குழந்தைகளிடம் பல கேள்விகள் கேட்டு அவர்களிடம் கலந்துரையாடினார். பள்ளிக்கூடத்தில் உள்ள ஆசிரியர்களை சந்தித்த அவர் மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை, வசதிகள் குறித்தும் கேட்டு அறிந்தார். அமைச்சரை நேரில் பார்த்த பள்ளி குழந்தைகள் உற்சாகமாக அவருடன் பேசினார்கள். ஆசிரியர்கள் சற்று பதற்ற நிலையில் காணப்பட்டனர். அவர்களிடம் அமைச்சர் சாதாரணமாக உரையாடி அவர்களையும் உற்சாகப்படுத்தினார்.

தேர்தல் பணி பரபரப்புக்கு இடையேயும் தனது துறைசார்ந்த பணிகளையும் உற்சாகமாக அமைச்சர் செய்து வருவது கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்