சென்னை பள்ளிக்கு வந்த அமெரிக்க ஆசிரியர்கள்: கற்பித்தல்-கற்றல் குறித்து கேட்டறிந்தனர்
ஆசிரியர் பரிமாற்றங்கள் நிகழ்ச்சி மூலம் அமெரிக்காவை சேர்ந்த 3 ஆசிரியர்கள் சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அங்கு மேற்கொள்ளப்படும் கற்பித்தல்-கற்றல் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
சென்னை,
அமெரிக்க அரசு 'புல்பிரைட் ஆசிரியர் பரிமாற்றங்கள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதற்கான நிதி உதவியை அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்கள் துறை வழங்குகிறது. இது அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மக்களிடையை ஒரு புரிதலை ஊக்குவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த ஆசிரியர் பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதன் மூலம் ஆண்டுதோறும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் கற்றுக்கொடுக்கின்றனர்.
இதில் பங்கேற்கும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வெவ்வேறு நாடுகளின் பள்ளிகளுக்கு சென்று அங்கு மாணவர்களின் கற்றல் பணி எவ்வாறு இருக்கிறது? ஆசிரியர்களின் கற்பித்தல் பணி எந்த அளவு உள்ளது? பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறதா? அவர்களுக்கு தேவையான கல்வி அறிவு புகட்டப்படுகிறதா? என்று பார்ப்பதோடு, அவர்களும் தங்கள் பங்காக சிலவற்றை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றனர்.
3 அமெரிக்க ஆசிரியர்கள்
அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான புல்பிரைட் ஆசிரியர் பரிமாற்றங்களுக்கான நிகழ்ச்சி தற்போது தொடங்கி இருக்கிறது. அதன்படி, அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தை சேர்ந்த கேசி கலன், நியூயார்க் நகரத்தை சேர்ந்த ஜோசப் டோனெல்லி, இன்டியானா மாநிலத்தை சேர்ந்த மெர்வின் பெரினி ஆகிய 3 பேர் தமிழ்நாட்டில் சென்னைக்கு வந்துள்ளனர்.
கடந்த 7-ந் தேதி சென்னை வந்த இவர்கள், சென்னை சேத்துப்பட்டில் உள்ள யூனியன் கிறிஸ்தவ பொது பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி வருகின்றனர். அங்கு மாணவர்களுக்கான கற்றல் பணிகள் குறித்தும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகள் தொடர்பாகவும் பார்த்தும், கேட்டும் அறிந்து கொண்டனர். மேலும் அவர்களுக்கு கல்வி அறிவு தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றனர்.
பத்திரிகையாளர் சந்திப்பு
ஒரு வார பயணமாக அவர்கள் சென்னை வந்து மாணவ-மாணவிகளுடன் தினமும் அவர்களின் வகுப்பறைக்கு நேரில் சென்று அன்றாட செயல்பாடுகளை கண்காணிக்கின்றனர். இன்று (வியாழக்கிழமை) அந்த பள்ளி முதல்வருடன் சேர்ந்து, பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். நாளை (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்ல இருக்கின்றனர்.