அமராவதி அணையின் நீர் இருப்பு 62 அடியை நெருங்கியது
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர் இருப்பு 62 அடியை நெருங்கியது.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர் இருப்பு 62 அடியை நெருங்கியது.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளைத் தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு மறையூர் பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.
அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும் ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, ராமகுளம்- கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அதுதவிர சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆறு மற்றும் கால்வாய்களை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
62 அடி நீர் இருப்பு
கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மற்றும் ஓடைகள் வறட்சியின் பிடியில் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக அவை முற்றிலுமாக நீர்வரத்தை இழந்து தவித்து வந்தது. அத்துடன் வனப்பகுதியை ஆதாரமாகக் கொண்ட அமராவதி அணையின் நீர்இருப்பும் தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் வெப்பச் சலனத்தின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு வினாடிக்கு 190 கனஅடி முதல் 600 கனஅடி வரையிலும் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் 27-ந் தேதி 55.55 அடியாக இருந்த அணையின் நீர்இருப்பு படிப்படியாக உயர்ந்து நேற்று நிலவரப்படி 62 அடியை நெருங்கி உள்ளது.
விவசாயிகள் கவலை
இதற்கிடையில் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் வனப்பகுதியில் மழை பெய்வதற்காக சூழல் நிலவி வருவது விவசாயிகள் மத்தியில் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 61.81 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 79 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.