மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தாலும்தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்வது வேதனை தருகிறது- ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினாலும், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வது வேதனை தருகிறது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Update: 2023-07-12 20:59 GMT


மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினாலும், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வது வேதனை தருகிறது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழக மீனவர்கள்

சென்னையை சேர்ந்த பீட்டர்ராயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

1974-ம் ஆண்டு உடன்படிக்கைபடி கச்சத்தீவு, இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி இந்த பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடிதொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது. ஆனால் கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்தியாவை சேர்ந்த 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

தற்போதும் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்கிறது. சமீபத்தில் கூட தமிழக மீனவர்களை கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்து உள்ளனர். இதன்மூலம் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர்.

எனவே தமிழக மீனவர்களை மீட்கவும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

மத்திய அரசு நடவடிக்கை

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, கடலில் மீன்பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க சென்றவர்களில் 2014-ம் ஆண்டுக்கு பின்பு தமிழக மீனவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. இலங்கை கடற்படையினரால் கைதான மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதாடினார்.

தொடரும் தாக்குதல்

இதை பதிவு செய்த நீதிபதிகள், நடுக்கடலில் மீன்பிடிக்கச்செல்லும் இந்திய மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் தாக்குதல் நடத்தி கைது செய்து உள்ளனர். மீனவர்களின் படகுகள், வலைகளையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர் என வேதனையுடன் தெரிவித்தனர்.

ஆனாலும் இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்