ஒப்பந்த நர்சுகளுக்கு சம்பள உயர்வுடன் மாற்றுப்பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

ஒப்பந்த நர்சுகளுக்கு ஊதிய உயர்வுடன் மாற்றுப்பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-02 23:05 GMT

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் 'நலம் 365' என்ற 'யூடியூப்' சேனலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாற்றுப்பணி

கடந்த ஆட்சியில் விதிமுறைகளுக்கு மாறாக நியமனம் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 301 நர்சுகளுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் இதுவரை வாங்கி வந்த சம்பளம் ரூ.14 ஆயிரத்தை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

இதை பற்றி தெரியாமல் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை கேலிக்கூத்தானது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நர்சுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதற்கு வாய்ப்பு குறைவு. ஏனென்றால் தேசிய சுகாதார குழுமம் மூலம் செய்யப்படும் பணி நியமனங்கள் அனைத்தும் தற்காலிக பணியிடங்களாகும். நிரந்தர பணியிடங்கள் அனைத்தும் எம்.ஆர்.பி. மூலமே நிரப்பப்படும் என்பதை நா்சுகள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மருத்துவ துறைக்கு நர்சுகளை எடுக்கும்போது கொரோனா காலத்தில் பணிபுரிந்த நர்சுகளை கொண்டு பணிநியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சீனாவில் இருந்து வந்தவருக்கு பி.எ.-2 வகை வைரஸ் பாதிப்பும், மஸ்கட், பாங்காங்கில் இருந்து வந்தவருக்கு பி.எ.-2 (10.1) என 6 பேருக்கும் ஒமைக்ரானின் உருமாற்ற வைரஸ் பாதிப்புகளே கண்டறியப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கும் வைரஸ் பாதிப்புகளாகும். இந்த வகை வைரஸ் பாதிப்புகளில் உயிரிழப்பு நிலை இல்லை. கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் 93 பேரின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் 91 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது.

மற்ற 2 பேருக்கு மட்டும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அனைவரும் நலமுடன் உள்ளார்கள். பி.எப்-7 வகை கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

யோகா

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் நா.எழிலன் எம்.எல்.ஏ., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச்செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் ச.உமா, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஹரிஹரன், தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தலைவர் கிளட்ஸ்டோன் புஷ்பராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் வி.பி.ஹரிசுந்தரி, மருத்துவக்கல்வி இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சாந்திமலர், பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் குழு தலைவர் நே.சிற்றரசு மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாளர் நலவாழ்வு நிகழ்ச்சியில், யோகா பயிற்சியை மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, தானும் செய்து காட்டினார். இந்த நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா, இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் காளிதாஸ் சவான் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்