குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று நடவடிக்கை

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று நடவடிக்கை

Update: 2023-03-29 18:45 GMT

கோவை

கோவை மாநகராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்து உள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு

கோவை மாநகராட்சியில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கோவை மாநகர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1 மற்றும் 2, வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சிறுவாணி அணை நீர் மட்டம் குறைந்ததை தொடர்ந்து அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவு பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 100 எம்.எல்.டி. தண்ணீர் எடுப்பதற்கு பதிலாக 50 எம்.எல்.டி. மட்டும் எடுக்கப்படுகிறது.

இதன்காரணமாக கோவை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு 10 நாட்கள் அல்லது 2 வாரத்திற்கு ஓரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதேபோல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நேரமும் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் குடிநீர் எடுப்பு

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது:- மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் மேற்கொள்ள மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி பில்லூர் 1 மற்றும் 2 திட்டங்களில் முன்பு 110 எம்.எல்.டி. எடுக்கப்பட்டது. தற்போது அது 120 எம்.எல்.டி.யாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. வடவள்ளி-கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் 7 எம்.எல்.டி.க்கு பதிலாக 10 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதேபோல ஆழியாறு குடிநீர் திட்டத்தில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் மாநகராட்சிக்கு கூடுதல் குடிநீர் கிடைப்பதால் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மேலும் மேடான இடங்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

குப்பை தொட்டி

மார்க்கெட் உள்ளிட்ட வர்த்தக பகுதிகளில் வைப்பதற்காக 2 டன் கொள்ளளவு கொண்ட ராட்சத குப்பை தொட்டிகள் 10 வாங்கப்பட்டு உள்ளன. இந்த குப்பை தொட்டிகள் எளிதாக துருப்பிடிக்காது. அதே நேரத்தில் விரைவாக நிரம்பாது. எனவே முக்கிய இடங்களில் மட்டும் இந்த குப்பை தொட்டி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்