நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துகிறோம் என்எல்சி தகவல்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதாக என்.எல்.சி. தெரிவித்துள்ளது.
நெய்வேலி,
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் நெய்வேலியில் இயங்கி வருகிறது நவரத்னா தகுதி பெற்ற என்.எல்.சி. இந்தியா நிறுவனம். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சக்தியில் குறிப்பிடத்தக்க பங்கை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
66 ஆண்டுகளை கடந்து வைர விழா கண்ட, இந்நிறுவனம் தற்போது ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், அசாம் போன்ற மாநிலங்களிலும் அந்தமான், நிகோபார் தீவுகளிலும் விரிவுபடுத்தி வருகிறது.
தற்போது நெய்வேலியில் 3 நிலக்காி சுரங்கங்களில் ஆண்டுக்கு 3 கோடி டன் பழுப்பு நிலக்கரி மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சரில் ஆண்டுக்கு 21 லட்சம் டன் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுக்கும் சுரங்கம் என மொத்தம் 4 சுரங்கங்களை இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
நெய்வேலியில் உள்ள முதல் மற்றும் 2-ம் அனல்மின்நிலையங்களின் விரிவாக்கங்கள், நெய்வேலி புதிய அனல்மின் நிலையம் என்று மொத்தம் 4 மின்நிலையங்களில் மணிக்கு 33 லட்சத்து 90 ஆயிரம் யூனிட்(3390 மெகாவாட்) மின்சக்தியை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை ஆகும்.
இதேபோன்று ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சாில் 250 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் ஒன்றும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிலக்கரி சுரங்கத்துறை
இந்நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்திமற்றும் பகிர்மானகழகம் எனப்படும் முந்தைய தமிழ்நாடு மின்வாரியத்துடன் இணைந்து, 89:11 என்ற மூலதான வகிதத்தில் என்.எல்.சி. தமிழ்நாடு மின் நிறுவனம் என்கிற கூட்டு நிறுவனத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் தூத்துக்குடியில் நிலக்கரியில் இயங்கும் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை செயல்படுத்தி வருகிறது. இதேபோன்று நிலக்கரியில் இயங்கும் அனல் மின் துறையில் கால்பதித்து, உத்தரபிரதேச மாநிலம் காதாம்பூர் பகுதியில் நிலக்கரியில் செயல்படும் 1980 மெகாவாட் மின் நிலையத்தை உத்தரப்பிரதேஷ் ராஜ்ய வித்யூத் உத்பாதன் நிகாம் நிறுவனத்துடன் இணைந்து 51:49 என்கிற மூலதான விகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள நெய்வேலி உத்தரப்பிரதேச மின் நிறுவனம் என்ற கூட்டு முயற்சி நிறுவனத்தின் மூலம் இந்நிறுவனம் அமைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒடிசா மாநிலம் தலபிரா பகுதியில் இந்நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலக்கரி சுரங்கத்துக்கு அருகே 2400 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தையும் அமைக்க உள்ளது.
தலபிரா பகுதியில் ஆண்டுக்கு 200 லட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம்-எண் 2 மற்றும் 3-ல் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நிலக்கரி உற்பத்தி தொடங்கியதன் மூலம் இந்நிறுவனம் நிலக்கரி சுரங்கத்துறை என்கிற புதிய வர்த்தகத்திலும் தன்னை தற்போது ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.
மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் 2023-24 நிதியாண்டுக்குள் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று இலக்குடன் பணிகள் நடந்து வருகிறது.
பசுமை ஆற்றல்
பசுமை ஆற்றல் எனப்படு்ம் புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையின் கீழ் நெய்வேலி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டஙக்ள் மற்றும் தெற்கு அந்தமான் தீவுகளில் மொத்தம் 1370 மெகாவாட் சூரிய ஒளி மின் நிலையங்களையும், தென்காசி மாவட்டம் கழுநீர்குளத்தில் 51 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களையும் இந்நிறுவனம் வெற்றிகரமாக இயக்கி வருகிறது. தெற்கு அந்தமான் தீவுகளில் மின்சக்தியை சேமிக்கும் வகையில் சூரிய ஒளிமின் நிலையத்தையும் இயக்கி வருகிறது. 2030 ஆண்டில் ஆண்டுக்கு 8 கோடியே 41 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரியை வெட்டியெடுக்க மணிக்கு ஒரு கோடியே 71 லட்சத்து 71 ஆயிரம் யூனிட் மின்சக்தியை தயாரிக்கும் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு புதிய திட்டங்களையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இயற்கை அன்னை கொடையாக வழங்கி உள்ள எரிபொருள் வளத்தை அகழ்ந்தெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு மூல காரணமாக விளங்கும் மின் சக்தியை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வருவதுடன், அறை நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமாக ஒரு சமூக பொறுப்புணர்வுமிக்க நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது.
சமூக மேம்பாட்டு பணிகள்
அதோடு, சமுதாயநலப்பணிகளின் மூலம் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது. தான் வளர்வதுடன், தன்னை சுற்றிலும் உள்ள சமூகமும் வளர வேண்டும், அதுதான் அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சியாக இருக்கும் என்கிற நோக்கத்துடன் பல்வேறு ஆக்கப்பூர்வமான சமூக மேம்பாட்டு பணிகளை 60 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில் குறிப்பாக வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்த ஜல் பரியாப்தா திட்டம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தடுப்பணைகள், செறிவூட்டுக் கிணறுகள் மற்றும் மழைநீர் சேமிப்பு வசதிகள் ஏற்படுத்தும் ஜல் உதய் திட்டம், கிராமங்கள் மற்றும் புண்ணிய தலங்களில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை அமைப்பதுடன், கோடைகால மோர்பந்தல் அமைக்க ஜல் தாரா திட்டம், கிராம இளைஞர்கள் இளம்பெண்களுக்கு சுயதொழிலை கற்றுக்கொடுக்க ஜீவிகா திட்டம், சினேகா என்கிற சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் பயிற்சி மையம், ஷ்ரவாணி என்கிற காது கேளாத குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி, வைகை என்கிற ஆதரவற்ற மகளிருக்கும் கைம்பெண்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கும் மையம், ஆனந்த இல்லம் என்கிற ஆதரவற்ற இருபால் முதியவர்களை பராமரித்து உணவு வழங்கும் இல்லம்.
நீட் தேர்வுக்கு பயிற்சி
கிராமப்புறங்களில் மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களக்கு சீருடை, உணவு வழங்குவதுடன், நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்கும் தலீம் திட்டம், சாலை வசதிகள் சிறிய பாலங்கள் போன்றவை வழங்க டோரா திட்டம், மருத்துவ முகாம் நடத்துவதற்கு ஆரோக்யா திட்டம் என்று எண்ணற்ற திட்டங்களையும் இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
மேற்கண்ட தகவல் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.