படிப்புடன், விளையாட்டிலும் திறமையை வெளிக்காட்ட வேண்டும்
படிப்புடன், விளையாட்டிலும் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி பேசினாா்.
படிப்புடன், விளையாட்டிலும் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி பேசினாா்.
கோடைகால விளையாட்டு பயிற்சி
மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் கடந்த 15 நாட்களாக கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமின் நிறைவு நாளில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், மயிலாடுதுறையில் 15 நாள் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் 250 பேர் பங்கேற்றுள்ளீர்கள்.
தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி ஆகிய போட்டிகளில் பயிற்சி பெற்றதை மறுபடியும் தொடர்ந்து நன்றாக கற்றுக்கொண்டு முழு கவனம் செலுத்தி நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வேண்டும். படிப்பில் நிறைய ஆர்வம் இருந்தால் படிப்புடன் விளையாட்டையும் சேர்த்து திறமையை வெளிக்காட்ட வேண்டும். விளையாட்டு மட்டும் தெரிந்திருந்தால் விளையாட்டில் முழு கவனம் செலுத்தி விளையாட்டை முழுமையாக கற்றுக்கொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும்.
உடல் நலம் தேவை
மனிதனுக்கு நல்ல உடல் நலம் தேவை. நல்ல உடல் நலம் இருந்தால் மூளை சிறப்பாக இருக்கும். இது இரண்டும் சரியாக இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி நன்றாக செய்ய வேண்டும். விளையாட்டில் நன்றாக கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளையாட்டில் சிறந்து விளங்கி தனது நாட்டிற்கே பிரதமர் ஆனார். விளையாட்டில் சிறந்து விளங்கினால் புகழின் உச்சிக்கே சென்றடையலாம்.
ஆகையால், மயிலாடுதுறை மாவட்ட மாணவர்கள் விளையாட்டு துறையை சிறப்பாக பயன்படுத்தி கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டி விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், இந்திய விளையாட்டு ஆணைய உதவி இயக்குனர் திவேதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லாசா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி மற்றும் பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.