கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? பக்தர்கள் கருத்து
கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? என்று பக்தர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
கடலூர் மாவட்ட கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்களும், அதிகாரியும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
கோவில்களில் அன்னதானம்
தானத்தில் சிறந்தது அன்னதானம், உணவின்றி உயிரில்லை, உலகமும் இல்லை. உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது. அன்னதானம் அளவற்ற புண்ணியத்தை நல்கும். மற்ற பொருட்களை தானமாக கொடுத்தாலும், அதை வாங்குபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவார்கள்.
ஆனால் அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாக பெறுபவரிடம் இருந்து கேட்க முடியும். ஆகவே தான் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்கிறோம். அன்னதானம் மட்டுமே செய்தவருக்கு மட்டுமின்றி, அவரது சந்ததியினரையும் காக்கும் வல்லமை படைத்தது என்பார்கள். பசியோடு இருப்பவர்களுக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்பாகவும் கருதப்படுகிறது.
ஆன்மிகத்தில் ஈடுபடுவோருக்கு அன்னதானம் அளிப்பது நம் கலாசாரத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதான திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பை பெற்று தற்போது படிப்படியாக அதிகரித்து 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாள் முழுவதும்...
இதில் குறைந்தது 25 நபர்கள் முதல் அதிகபட்சமாக 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களிலும் நாள்முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கி வைத்தார். இங்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
21 கோவில்களில்...
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1,929 கோவில்கள் உள்ளன. இதில் கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி, பாடலீஸ்வரர், வீரஆஞ்சநேயர், புதுப்பாளையம் ராஜகோபாலசாமி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர், விருத்தகிரீஸ்வரர், பண்ருட்டி வீரட்டானேஸ்வரர், சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் உள்பட 21 முக்கிய கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கோவில்களில் அன்னதான திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது. சாப்பிடும் பக்தர்களுக்கு மனநிறைவு கிடைக்கிறதா? என்று அறிந்து கொள்வதற்காக கோவில்களில் சென்று பார்த்த போது, சாப்பாடு நிறைவாக இருக்கிறது. வீட்டு உணவை விட நன்றாக இருப்பதாகவும் பக்தர்கள் கூறினர்.
தாமதமாக வந்தால் கிடைக்காது
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட யுவராமகிருஷ்ணன்:- நான் தினந்தோறும் கோவிலில் தான் வந்து சாப்பிடுகிறேன். சாப்பாடு நன்றாக இருக்கிறது. சாம்பார், பொரியல் சேர்த்து வழங்குகிறார்கள். சர்க்கரைநோய் உள்ளவர்களும் சாப்பிடும் வகையில் அவியல் வைத்தால் நன்றாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்கு, அதாவது 12.30 மணிக்குள் வந்தால் தான் சாப்பாடு கிடைக்கும். தாமதமாக வந்தால் கிடைக்காது. ஆகவே மதியம் 1.30 மணி வரைக்கும் சாப்பாடு வழங்கினால் நல்லது.
மன நிறைவாக உள்ளது
சுப்புலட்சுமி:- எனக்கு சொந்த ஊர் கடலூர் தான். ஆனால் சென்னையில் தான் தற்போது வசித்து வருகிறேன். கடலூரில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளுக்கு வரும் போதெல்லாம் பாடலீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு தான் செல்வேன். அந்த வகையில் தற்போது வந்தேன். அன்னதான கூடத்துக்கு வந்து அன்னதானம் சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. வழக்கமாக குறைவான சாப்பாடு தான் சாப்பிடுவேன். இங்கு கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன். மனநிறைவாக உள்ளது.
மேலக்குப்பம் எழிலரசி:-விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி வந்து சாமி கும்பிட்டு விட்டு செல்வோம். அவ்வாறு வரும் போது கோவிலில் போடும் அன்னதானம் அருமையாக இருக்கும். இதனால் இந்த சாப்பாட்டை நாங்கள் தவற விட்டதே கிடையாது. ரசம், சாம்பார், பொரியலுடன் இங்கு கிடைக்கும் சாப்பாடு வீட்டு சாப்பாட்டை விட அருமையாக உள்ளது. சாப்பாடு பரிமாறும் ஊழியர்களும் அன்போடு பரிமாறுகிறார்கள்.
வேக வைக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி மகாலட்சுமி:- விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தேன். இங்கு அன்னதானம் போடுவதை பார்த்து சாப்பிட்டேன். சாப்பாடு நன்றாக உள்ளது. சாதத்தை மட்டும் நன்கு வேக வைத்து வழங்கினால் நன்றாக இருக்கும். மென்று விழுங்குவதற்கு சிறிது கடினமாக இருக்கிறது. வயதானவர்களால் சாப்பிட முடியாத நிலை உள்ளது. உணவின் சுவையும் நன்றாகவே இருக்கிறது. நாமே நமக்கு தேவையான சாப்பாட்டினை எடுத்து சாப்பிடுவது போன்று அன்னதான கூடத்தை நவீனப் படுத்தினால் சாப்பாடு மீதமாகி வீணாக்காமல் மிச்சப்படுத்த முடியும். மேலும் பலருக்கு உணவு வழங்க முடியும். இங்கு சாப்பிடுபவர்கள் அனைவருமே கோவிலுக்கு வரும் என்னை போன்ற பக்தர்கள் என்பதால் மதிய நேரத்தில் பக்தர்கள் வயிறு நிறைந்து மனநிறைவாக செல்கிறார்கள்.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் சாப்பிட்ட முத்தையன்:- வெளியூர்களில் இருந்து சாமி தரிசனம் செய்ய வருவோர் மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக ஓட்டல்களை தேடி அலைய வேண்டும். ஆனால் கோவில்களிலேயே அன்னதானம் வழங்குவதால், அதை பிரசாதமாக கருதி பக்தர்கள் சாப்பிடுகிறார்கள். நானும் இங்கு தான் சாப்பிடுகிறேன். இது மனநிறைவாக உள்ளது. அன்னதானம் வழங்கும் பக்தர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த வேண்டும். பொரியல் ஒரு முறை மட்டும் தான் வழங்குகிறார்கள். காய்கறிகளும் சாம்பாரில் கொஞ்சம் அதிகமாக போட்டால் இன்னும் நன்றாக இருக்கும். இதற்கு போதுமான நிதியை அரசு ஒதுக்க வேண்டும். 50 பேருக்கு தான் சாப்பாடு வழங்குகிறார்கள். கூடுதல் நபருக்கு சாப்பாடு வழங்க வேண்டும்.
திருப்பாதிரிப்புலியூர் சின்னப்பொண்ணு:- வீட்டில் நாங்கள் சமைப்பதை விட நன்றாக சமையல் செய்து கோவிலில் அன்னதானம் வழங்குகிறார்கள். சாம்பார், பொரியல் நன்றாக இருக்கிறது. நான் இங்கு தான் வந்து சாப்பிடுகிறேன். காலை, இரவு நேரங்களிலும் உணவு வழங்கினால், ஏழை, எளிய மக்கள், யாசகம் பெறுவோருக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
சிறப்பாக செயல்படுகிறது
கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி கூறியதாவது:- கடலூர் மாவட்டத்தில் 21 முக்கிய கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதில் திருவந்திபுரம், பாடலீஸ்வரர் கோவில், விருத்தாசலம் கொளஞ்சியப்பர், விருத்தகிரீஸ்வரர் ஆகிய 4 கோவில்களில் மட்டும் தினந்தோறும் 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மற்ற கோவில்களில் 50 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒரு இலைக்கு ரூ.30 செலவிடப்படுகிறது. இந்த திட்டத்தில் தங்களையும் இணைத்து கொள்வதற்காக பக்தர்கள் தங்கள் பிறந்த நாள், திருமணநாளில் அன்னதானம் வழங்குவதற்காக ரூ.2,500, ரூ.5 ஆயிரம் என நிதி வழங்குவார்கள். அதை அவர்கள் பெயரில் வடை, பாயாசத்துடன் மதிய உணவு வழங்குகிறோம்.
பக்தர்களின் கருத்தையும் கேட்டு வருகிறோம். அவர்கள் சாப்பாடு நன்றாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இது தவிர நாங்களும் நேரில் சென்று சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்கிறோம். கட்டளைதாரர்கள் ரூ.15 ஆயிரம் செலுத்தி விடுவார்கள். அந்த நிதியில் இருந்து ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் அன்னதானம் வழங்குகிறோம். வடலூரில் 3 வேளையும் உணவு வழங்கி வருகிறோம். இந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இட நெருக்கடி
கோவில்களில் அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபடுவோரும், சமையல் செய்பவர்களும் கூறுகையில், கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சாப்பிட வருவோருக்கு முதலில் டோக்கன் வினியோகம் செய்கிறோம். முதலில் வருவோருக்கும், வெளியூர் பக்தர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சாப்பாட்டை நல்ல முறையில் தயார் செய்து வழங்கி வருகிறோம். பரிமாறவும் செய்கிறோம். அப்படியும் சிலர் குறை சொல்லுவார்கள். அதை நிதானத்துடன் கேட்டு, அவர்களுக்கு எங்களால் முடிந்த பணியை சிறப்பாக செய்து வருகிறோம். டோக்கன் கொடுக்கும் போது சில நேரம் தள்ளு, முள்ளு ஏற்படும். அவர்களை வரிசையில் வருமாறு கூறினால் தகராறு செய்வார்கள். அதையும் சகித்து கொள்கிறோம். சமையல் கூடமும், அன்னதான கூடமும் அருகருகே உள்ளது. இட நெருக்கடி உள்ளது. சமையல் கூடம் கொஞ்சம் பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றனர்.