சுருளி அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தேனி அருகே உள்ள சுற்றுலா தளமான சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
தேனி:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலா, புண்ணிய தலமாக விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த மலைப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து அருவியாக கொட்டுகிறது. இதில் குளித்தால் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
இப்படி சிறப்பு பெற்ற சுருளி அருவியில் குளிப்பதற்காக தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தற்போது வெள்ளம் குறைந்த நிலையில் வனத்துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்துள்ளனர்.