ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்; விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாமரைக்குளம்:
கருவேல மரங்கள்
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவித்தனர். இதில் ஆண்டிப்பட்டாக்காடு பாலகிருஷ்ணன் பேசுகையில், கருப்பிலா கட்டளையில் இருந்து மருதையாற்றுக்கு செல்லும் வாய்க்காலை ஆழப்படுத்த வேண்டும். சுக்கிரன் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். மருதையாற்றில் கருவேல மரங்கள் அதிக அளவில் இருப்பதால், மழைக்காலங்களில் வரும் காட்டாற்று வெள்ளத்தால் விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே மருதையாற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும்.
திருமழபாடி கருப்பையா பேசுகையில், வேளாண்மை பொறியியல் துறையில் இதுவரை மானிய விலையில் வழங்கிய பொருட்களின் விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். எப்போது என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பதை அறிவிப்பு பலகையில் தெரியப்படுத்த வேண்டும், என்றார்.
பணம் பெறுபவர்கள் மீது நடவடிக்கை
குழுமூர் பஞ்சநாதன் பேசுகையில், சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் இருந்து பெறப்படும் கனிமவள நிதி மூலம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், வரத்து வாய்க்கால்களை பருவமழைக்கு முன்னர் பலப்படுத்த வேண்டும், என்றார். சுப்புராயபுரம் ராமலிங்கம் பேசுகையில், மணக்கால் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், என்றார்.
கீழகவட்டாங்குச்சியை சேர்ந்த மணியன் பேசுகையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து அதிக அளவில் பணம் பெறப்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, பணம் பெறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
கதவணை அமைக்க வேண்டும்
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசுகையில், கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. அதை தடுக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 5 இடங்களில் கதவணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குறிப்பாக அரசு அறிவித்த தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும் அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்திற்கும் இடையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். யூரியாவை கூடுதல் விலைக்கு விற்கும் தனியார் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் தேவையான உரங்களை இருப்பு வைக்க வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும், என்றார்.
கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் ராஜேந்திரன், செங்கமுத்து, விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினர்.