4 மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ரூ.20 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு

4 மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-21 13:41 GMT

சென்னை,

வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் 2-வது வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் முக்கிய நீர் வழிகளான, கூவம் ஆறு, அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நூறு மற்றும் விருகம்பாக்கம் கால்வாய், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்று வாய்க்கால் மற்றும் வெள்ள நீர் கால்வாய்கள் நீர்வளத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அவற்றின் முக்கிய நீர் வழிகளில் திடக்கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால், வெள்ளம், தொற்றுநோய்கள் பரவுதல், உள்கட்டமைப்புகளுக்கு சேதம் போன்றவை ஏற்படுவதை தடுக்க, தூர் வார உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால் நீர் வழிகள் குப்பைகள், வண்டல் மண், களைகள், அடைப்புகளை அகற்ற வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், வெள்ளம் ஏற்படாமல் இருக்கவும், வெள்ளத்தை நிர்வகிக்கவும், நீர் வழிகளில் தங்கு தடை இன்றி நீர் ஓட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

எனவே, பருவமழைக்கு முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, 2011 முதல் ஒவ்வொரு ஆண்டும் சென்னை பெருநகரப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள முக்கிய நீர் வழிகளிலும், பல்வேறு நீர்நிலைகளிலும் குப்பைகள், கழிவுப் பொருட்கள் மற்றும் நீர்வாழ்களை அகற்றுதல் போன்ற பருவமழைக்கு முந்தைய ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்நிலைகள் கால்வாய்கள் வழியாக மழை நீர் தங்கு தடை இன்றி செல்ல ஏதுவாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்