தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கீடு -ரெயில்வே மந்திரி அறிவிப்பு
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
சென்னை,
2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்தார். அதில் ரெயில்வேக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று தனது அமைச்சகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
புதிய ரெயில் பெட்டிகள்
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-2014-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது வெறும் ரூ.879 கோடி மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது. அந்தவகையில் இது 7 மடங்கு அதிகம்.
இந்த ஆண்டு 253 ரெயில் பெட்டிகளை புதிதாக மாற்றும் திட்டம் உள்ளது. அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் அனைத்து பழைய ரெயில் பெட்டிகளும் நீக்கப்பட்டு, புது பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரெயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு முழு ஆதரவு அளித்து வருகிறது. தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெற்கு ரெயில்வே பொதுமேலாளர்
பின்னர் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் கே.என்.சிங் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், 'மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரெயில்வேக்கு ரூ.11 ஆயிரத்து 313 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வேயில் தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழியாக) உள்ளிட்ட 12 வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ரெயில் பாதை பணிக்கு ரூ.1,158 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
தெற்கு ரெயில்வேயில் நடந்து வரும் 26 வழித்தடங்களை இரட்டை வழித்தடங்களாக மாற்றும் பணிக்காக ரூ.1,564 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய கே.என்.சிங், தென்னக ரெயில்வேயில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.