பிரதமர் வீடு திட்டத்தில் தகுதி இல்லாதோருக்கு வீடு ஒதுக்கீடு; நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து 6 மாதங்களில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அரியலூரில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கீழ் ஓரே பயனானிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதியை அதிகாரிகள் கையாடல் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்செல்வி ஆகியோரின் அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பத்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் வாதிடப்பட்டது.
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு என பல வழக்குகள் உள்ளதால் இதனை தீவிரமாக கருதவேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், ஊரக வளர்ச்சித்துறை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்தனர்.
மேலும், சட்ட விரோதமாக வீடு ஒதுக்கீடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்கள் அனைவருக்கும் அறிவுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் வீடு ஒதுக்கீட்டின் கீழ் பயனடைந்த பயனாளிகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்கவும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதி பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். சட்ட விரோதமாக வீடு ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி 6 மாதங்களில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.