நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? அண்ணாமலை பேட்டி

தி.மு.க.வை அப்புறப்படுத்தினால்தான் தமிழகம் வளரும் என்று அண்ணாமலை கூறினார்.

Update: 2024-02-17 00:06 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து தமிழக பா.ஜனதா சார்பில் இதுவரை யாரிடமும் பேசவில்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் நேற்று, என் மண் என் மக்கள் யாத்திரையின் ஒரு பகுதியாக, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தமிழக பா.ஜனதா சார்பில் இதுவரை நாங்கள் ஏதும் பேசவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டி ஆகிய 2 பேரை மேலிடம் நியமித்துள்ளது. கூட்டணி குறித்து பேச ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக குழுவை அமைத்துள்ளன. பா.ஜனதா தலைவர்களும் அதற்கான வேலையை செய்து வருகிறார்கள்.

பா.ஜனதாவுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக 52 சதவீதம் தான் வருகிறது. ஆனால், தி.மு.க.விற்கு 91 சதவீதம் வருகிறது. 48 சதவீதம் பணம் பா.ஜனதாவிற்கு தேர்தல் பத்திரம் இல்லாமல் வந்துள்ளது. இதன் மூலம், பா.ஜனதாவின் மீது மக்கள் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளது தெரியவருகிறது. தேர்தல் பத்திரம் திட்டத்தை சுப்ரீம் கோர்டு தடை செய்ததை முழுமையாக ஏற்கிறோம். ஆனால், இதில் மாற்றங்கள் செய்து மீண்டும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற பா.ஜனதா முயற்சி செய்யும். அதுவரை நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது.

தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது சில அரசு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். எனவே, தேதியை முடிவு செய்யும் பணி நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கத்திற்கும், பா.ஜனதா கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தலுக்கு முன்பாக ஒரு சிலர் கட்சி மாறி செல்வது வழக்கமாக நடைபெறுவதுதான்.

அந்தந்த பிராந்திய நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக பிராந்திய மொழிகள் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியே தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் கூட நமது தாய்மொழியில்தான் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்பதை 2022-ல் வெளிப்படையாக பிரதமர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தி.மு.க.வால் தான் தேய்கிறது என்பதுதான் உண்மை. இதைத்தான் நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் பிரசாரமாக முன்னெடுக்க உள்ளோம். தி.மு.க.வை அப்புறப்படுத்தினால்தான் தமிழகம் வளரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்