போலீசார் மிரட்டியதாக கூறிபொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை-விவசாயி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
போலீசார் மிரட்டியதாக கூறி தாலுகா போலீஸ் நிலையத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். இதற்கிடையில் விவசாயி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
போலீசார் மிரட்டியதாக கூறி தாலுகா போலீஸ் நிலையத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். இதற்கிடையில் விவசாயி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
பொள்ளாச்சி அருகே குரும்பபாளையத்தில் கள் இறக்க கூடாது என்று கூறி தாலுகா போலீசார் விவசாயிகளை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் கோவை நாராயணசாமி நாயுடு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஊர்வலமாக வந்து தாலுகா போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் புகார் மனு கொடுங்கள், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த கூடாது என்றனர். ஆனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் 2 பெண்கள் உள்பட 12 பேரை கைது செய்தனர். இதற்கிடையில் ராசக்காபாளையத்தை சேர்ந்த விவசாயி சக்கரவர்த்தி என்பவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-
கள் இறக்க அனுமதி
கடந்த 2009-ம் ஆண்டு முதல் கள் இறக்க அனுமதி கேட்டு தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். சங்கத்தை சேர்ந்த விவசாயியை தாலுகா போலீசார் மிரட்டி சென்று உள்ளனர். எனவே போராட்டம் முற்றுகையிட்டு உள்ளோம். கள்ளுக்கு சட்டம் நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும். கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கள்ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. கள்ளினால் எந்த கெடுதலும் இல்லை. முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயிகளின் முதல்-அமைச்சராக இருந்தால் நிச்சயம் கள் இறக்க அனுமதி கொடுப்பார் என்று தொடர்ந்து போராடி வருகின்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.