கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக புகார்: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக புகார்: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்தவர் ஓமந்தூரான். நிதி நிறுவன அதிபரான இவரை குடும்ப பிரச்சினையில் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்துவிட்டதாக அவரது 16 வயது மகன் போலீசில் சரண் அடைந்தார். இதுதொடர்பாக சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ஓமந்தூரான் கொலை வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும், குற்றவாளிகளுக்கு உடந்தையாக இன்ஸ்பெக்டர் செயல்படுவதாகவும் ஓமந்தூரானின் தந்தை ரங்கசாமி, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. மற்றும் தென்மண்டல ஐ.ஜி.யிடம் புகார் செய்தார்.
இதையடுத்து இந்த கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா நியமிக்கப்பட்டார். பின்னர் நடந்த விசாரணையில், ஓமந்தூரானை அவரது மனைவி பாண்டீஸ்வரி உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்ததும், மேலும் இந்த வழக்கில் உண்மை நிலவரம் தெரிந்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா, கொலையில் சிறுவனை சிக்க வைக்க முயற்சி செய்ததும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா நேற்று சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபாவை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.