'ஆரூத்ரா கோல்டு' நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.12½ கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு

‘ஆரூத்ரா கோல்டு' நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் ரூ.12½ கோடி பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்தார்.

Update: 2023-06-28 00:10 GMT

சென்னை,

சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் போலீஸ் ஐ.ஜி. ஆசியம்மாள் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களிடம் இருந்து முதலீட்டு தொகை பெற்று பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்ட 'ஆரூத்ரா கோல்டு' நிறுவனம், 'ஐ.எப்.எஸ்.' நிறுவனம், 'ஹிஜாவு' நிறுவனம் ஆகியவற்றின் மீதான வழக்குகளில் முதற்கட்டமாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஐ.எப்.எஸ். நிறுவனம் மீதான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் ரூ.32 கோடி மதிப்புள்ள சொத்துகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

'ஆரூத்ரா கோல்டு' நிறுவன வழக்கில் ரூ.23 கோடி மதிப்புள்ள சொத்துகளை அடையாளம் கண்டுள்ளோம். அதனையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதே போல 'ஹிஜாவு' நிறுவன மோசடி வழக்கில் ரூ.13 கோடி மதிப்புள்ள சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சி.வி.ஆர்.எஸ். சீட்டு கம்பெனி வழக்கிலும் ரூ.36 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் பறிமுதல் செய்யப்படும்.

ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நகைக்கடை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

நடிகர் ஆர்.கே.சுரேஷ்

'ஆரூத்ரா கோல்டு' நிறுவன வழக்கில் கைதான ரூஷோ என்பவர் நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு ரூ.12½ கோடி கொடுத்ததாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அந்த தகவல் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ரூஷோ சொன்ன இந்த தகவல் அடிப்படையில் நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தோம்.

அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ரூஷோ சொன்ன தகவலை வைத்து மட்டும் நடிகர் ஆர்.கே.சுரேசை குற்றவாளியாக கருத முடியாது. இதனால்தான் அவர் மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. அவர் விசாரணைக்கு ஆஜராகி சொல்லும் தகவல் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏஜெண்டுகளுக்கு சம்மன்

இந்த 3 பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய சுமார் 500 ஏஜெண்டுகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்தோம். அதன்படி 'ஹிஜாவு' நிறுவனத்தில் பணியாற்றிய 100 ஏஜெண்டுகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் 20 பேர் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள். மீதமுள்ள 80 பேர்களில் 35 ஏஜெண்டுகள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். மீதமுள்ள நபர்களிடமும் விசாரணை நடத்தப்படும்.

'ஆரூத்ரா கோல்டு' நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக பணியாற்றிய 100 பேருக்கும் முதற்கட்டமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்து 'ஐ.எப்.எஸ்.' நிறுவன ஏஜெண்டுகள் 100 பேருக்கும் சம்மன் அனுப்பப்படும்.

மேற்கண்ட 3 பெரிய நிறுவன வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு சொந்தமான சொத்துகள் எங்கேயாவது இருக்கிறதா? என்பது பற்றி தகவல் கிடைத்தால், அது பற்றி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்