பிறப்பு சான்றிதழ் உண்மை தன்மை குறித்து குற்றச்சாட்டு: நடிகர் தனுஷ் வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் - கீழ் கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் தனுஷ் பிறப்பு சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அந்த வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்யும்படி கீழ் கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2022-11-29 19:11 GMT


நடிகர் தனுஷ் பிறப்பு சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அந்த வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்யும்படி கீழ் கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நடிகர் தனுஷ்

மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த தம்பதி கதிரேசன்-மீனாட்சி. இவர்கள், கடந்த 2015-ம் ஆண்டு மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த ஒரு வழக்கில், நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

தற்போது டைரக்டர் கஸ்தூரிராஜாவின் வளர்ப்பு மகனாக உள்ளார். நடிகர் தனுஷ் எங்களுக்கு மாதம்தோறும் பெற்றோர் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

போலி பிறப்பு சான்றிதழ்

அதை விசாரித்த ஐகோர்ட்டு, தனுஷ் யாருடைய மகன் என்பதை உறுதிப்படுத்த அவரது பிறப்பு சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி இரு தரப்பினரும் தங்களிடம் இருந்த பிறப்பு சான்றிதழ்களை தாக்கல் செய்தனர். பின்னர் கதிரேசன்-மீனாட்சி தம்பதி மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு 2017-ம் ஆண்டில் உத்தரவிட்டது.

ஆனால் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. இதற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கதிரேசன் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சீராய்வு மனு

இதை எதிர்த்து கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த குற்றவியல் சீராய்வு மனுவில், டைரக்டர் கஸ்தூரிராஜாவின் மகன் தான் தனுஷ் என ஐகோர்ட்டு முடிவு செய்யவில்லை. தனுஷ் பிறப்பு சான்றிதழின், உண்மை தன்மையை ஆராய மதுரை மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வரை கிடைக்கவில்லை.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் எனது வழக்கை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே அந்த உத்தரவை ரத்து செய்து, எனது வழக்கை, மீண்டும் முறையாக விசாரிக்க மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

ஆவணங்கள் தாக்கல்

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்கில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் உள்ள ஆவணங்களை இங்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்