லஞ்சம் பெறுவதாக புகார்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

லஞ்சம் பெறுவதாக புகார்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார்.

Update: 2023-04-01 18:45 GMT

விக்கிரவாண்டி, 

முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு காலம் கடந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், பல்வேறு துறைகளில் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாகவும், பணியின்போது டாக்டர்கள் மருத்துவமனையில் இருப்பதில்லை, நோயாளிகளை சரிவர கவனிப்பதில்லை எனவும் புகார்கள் எழுந்தது.

இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் பழனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை பிரிவு, குடிநீர் வசதி, மருந்து இருப்பு வைத்திருக்கும் அறை, நோயாளிகள், பணியாளர்கள், வருகை பதிவேடுகள் மற்றும் பிற துறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுழற்சி முறையில்...

தொடர்ந்து கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி மற்றும் மருத்துவ துறை தலைவர்களிடம் கலெக்டா் பழனி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை சேவைகளை தாமதம் இன்றி வழங்க வேண்டும், அவர்களின் மருத்துவ அறிக்கையையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் சிகிச்சை பெறுபவர்களிடம் உரிய ஆலோசனை வழங்கவும் உயர்தரமான சிகிச்சை வழங்கவும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். வரும் காலங்களில் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் ஏதும் வராத வகையில் உரிய மருத்துவ சேவைகளை மருத்துவர்கள் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னம்பலம், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை, நிறைய மருத்துவ அலுவலர் வெங்கடேசன், மருத்துவ கண்காணிப்பாளர் ராதா, துறை தலைவர்கள் புகழேந்தி, அறிவழகன், டாக்டர்கள் அப்துல் ஹக்கீம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், துணைத்தலைவர் தினேஷ் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்