அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி, சின்னவெங்காயம் விற்பனை செய்ய வேண்டும்:ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி, சின்னவெங்காயம் விற்பனை செய்ய வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி, சின்னவெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர். நேற்று ஒரே நாளில் 380 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.பூமயில் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல சின்ன வெங்காயம் விலையும் அதிகரித்து உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
மீனவர்கள்
பெரியதாழையை சேர்ந்த மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், பெரியதாழையில் 400 பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். இந்த படகுகளுக்கு அரசு மானிய மண்ணெண்ணெய் வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்து வருகிறது. இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த 17 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீனவர்களுக்கு முறையாக மானிய விலை மண்ணெண்ணெய் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
வண்டுகள் தொல்லை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநகர ஒருங்கிணைப்பாளர் என்.ஆதிலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் உள்ள இந்திய உணவுக் கழக குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, வண்டுகள் தொல்லைக்கு மாவட்ட நிர்வாகம் முடிவு கட்ட வேண்டும் என்று கூறி உள்ளனர்.