சித்தேரி துணை மின்நிலையம் முன்பு அனைத்து கட்சி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சித்தேரி துணை மின்நிலையம் முன்பு அனைத்து கட்சி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தட்டுப்பாடின்றி மின்சாரம் வழங்கக்கோரி சித்தேரி துணை மின்நிலையம் முன்பு அனைத்து கட்சி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மின்வாரிய அதிகாரிகளிடமும் மனு அளித்தனர்.
ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி மற்றும் தென்பாதி, தலையாமங்கலம், சோழபாண்டி, சித்தேரி, வடபாதி, 54 நெம்மேலி, மரவாக்காடு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் இறைத்து விவசாய பயிர்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாததால் அங்கு பயிர்செய்யப்பட்டுள்ள நெல், பருத்தி, கடலை, எள்ளு உள்ளிட்டவை போதிய தண்ணீர் இல்லாததால் கருகுவதாக கூறி அனைத்து கட்சிகளை சேர்ந்த விவசாயிகள் மன்னார்குடி அருகே சித்தேரி துணை மின் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், மின்வெட்டை போக்கி தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதிபடுத்திட வேண்டும், கருகி வரும் பயிர்களை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
கோரிக்கை மனு
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய துணை செயலாளர் ராகவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சேகர், லோகநாதன், மாசிலாமணி மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.