வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் திருப்பூர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருப்பூர் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:- வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் தங்களது பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து விருப்பமுள்ளவர்களை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்குபெற செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க தேவையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் பேசும்போது, ஆதாரில் ஏற்கனவே உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதில் நடைமுறை சிக்கல் அதிகமாக உள்ளன. வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க வேண்டும். இந்த இணைப்பு தொடர்பாக யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.
விருப்பமுள்ளவர்களிடம் தான் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.