அனைத்து கட்சிகளும் திரவுபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் திரவுபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு, கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பா.ம.க.வின் ஆதரவை தெரிவித்தார்.
அங்கிருந்து வெளியே வந்த அன்புமனி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு பா.ம.க. ஆதரவு அளிக்கிறது என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். சென்னை வருகை தந்த திரவுபதி முர்முவுக்கு நாங்கள் நேரடியாக வந்து ஆதரவை தெரிவித்திருக்கிறோம். நிச்சயமாக வெற்றி பெறுவார்.
பழங்குடியினத்தை சேர்ந்த பெண்மணி. எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்த அவர் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். எங்கள் கட்சியின் அடிமட்ட கொள்கை சமூக நீதி. அதன் அடிப்படையில் அவருக்கு எங்கள் கட்சியின் முழு ஆதரவு. நாங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
கட்சிக்கு அப்பாற்பட்ட பெண்மணியாக அவரை பார்க்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பார்க்கக்கூடாது. அந்த வகையில், தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் அவரை ஆதரிக்க வேண்டும். சமூக நீதி என்று பேசினால், நிச்சயமாக திரவுபதி முர்முவேவை ஆதரிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.