"திருச்செந்தூர் கோவிலுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்" அமைச்சர் சேகர்பாபு பேட்டி
“வெளி மாநிலங்களுடன் ஒப்பிடும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை, ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் மெகா திட்ட திருப்பணிகள் செய்யப்பட உள்ளது.
இந்த திட்ட பணிகள் குறித்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முதற்கட்டமாக கோவில் விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள் தலைமையில் அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் வரைபடங்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தொலைக்காட்சி வசதியுடன் சுமார் 250 பேர் அமர்ந்து செல்லும் வகையில் காத்திருக்கும் அறைகள் அமைப்பது, தரிசன நேரத்தை குறைக்கும் வகையில் பக்தர்கள் கையில் குறியீட்டு சீட்டு (டேக்) வழங்குவது உள்பட பல்வேறு வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ேபட்டரி கார் சேவை
பின்னர் அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பயன்பாட்டிற்காக 4 பேட்டரி கார்களை தொடங்கி வைத்து, சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.175 கோடி
திருச்செந்தூர் கோவிலில் மேற்கொள்ளப்படவுள்ள மெகா திட்ட திருப்பணிகள் குறித்து கலந்தாய்வு செய்துள்ளோம். இந்த ஆய்வு குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆக்கப்பூர்வமான அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளப்படும். இன்னும் 3 ஆண்டுகளில் வெளி மாநிலங்களுடன் ஒப்பிடும் வகையில், பல்வேறு கோவில்களுக்கு இணையாக அனைத்து வசதிகள் இங்கு செய்து கொடுக்கப்படும். இந்த மெகா திட்டத்தில் ஹெச்.சி.எல். நிறுவனம் சுமார் ரூ.175 கோடி ஏற்று கொள்வதாக கூறியுள்ளது.
இன்னும் முழுமையான மதிப்பீடு தயாரிக்கப்படவில்லை. முழுமையான மதிப்பீடு தயாரிக்கப்பட்ட உடன் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் பங்கு, இந்து சமய அறநிலையத்துறை பங்கு, பக்தர்கள் பங்கு போன்றவற்றை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு பெரிய அளவில் இந்த கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும்.
அனைத்து ஏற்பாடுகள்
இந்த மெகா திட்டப்பணிகள் இருந்தாலும் தற்போது பக்தர்களுக்கு அத்தியாவசிய அடிப்படை தேவைகளான குடிதண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் போது தரிசனம் செய்யும் இடம் குறுகலாக இருப்பதால், பல்வேறு புதிய மாற்று திட்டங்கள் கொண்டுவர துறை சார்பில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது. வரும் காலங்களில் பக்தர்கள் எந்த குறையும் இல்லாத அளவிற்கு சிறப்பாக தரிசனம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும்.
மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 கோவில்களில் பவுர்ணமி நாளில் 108 விளக்கு பூஜை நடத்தப்படும் என அறிவித்து இருந்தோம். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில், சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பண்ணாரி அம்மன் கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உள்ளிட்ட 12 கோவில்களில் திருவிளக்கு பூஜை தொடங்கியது.
இவ்வாறு அவர் கூறினார்.