8 கிராமங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்

தரங்கம்பாடி தாலுகாவில் விடுபட்ட 8 கிராமங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2023-01-03 18:45 GMT

தரங்கம்பாடி தாலுகாவில் விடுபட்ட 8 கிராமங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

கோரிக்கை மனு

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர் குரு.கோபிகணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்கள் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி விவசாயிகளுக்கு ரூ.44 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள குத்தாலம் வட்டாரத்துக்குட்பட்ட கடக்கம், அகரஆதனூர், முத்தூர், கொடவிளாகம், எடக்குடி, பெரம்பூர், கிளியனூர், அகரவல்லம் ஆகிய 8 கிராமங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை.

நிவாரணம் வழங்க வேண்டும்

மழை பாதிப்பு ஏற்பட்டவுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரம் இந்த 8 கிராமங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது தற்போது கனமழையால் பாதிக்கப்பட்ட இந்த 8 கிராமங்களை தவிர்த்து நிவாரணம் வழங்கப்படுவது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே நிவாரண பட்டியலில் கனமழைகள் பாதிக்கப்பட்ட அந்த 8 கிராமங்களையும் இணைத்து நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனையடுத்து மனு அளிக்க வந்த விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்