தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறினார்
விக்கிரவாண்டி:
மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 14 பேர் பலியானார்கள். 58 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்களை புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- போலீசாரின் அனுமதியோடு அரசியல் தொடர்பில் இருப்பவர்கள் விஷ சாராயத்தை விற்றுள்ளனர். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்தில், ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் மதுவிலக்கு பற்றி எதுவும் பேசவில்லை. மாறாக டாஸ்மாக்கில் மதுவிற்பனையை அதிகரிக்க நிர்ணயம் செய்திருப்பதை என்னவென்று சொல்வது. மக்களின் உயிரை பாதுகாப்பதை தவறிவிட்ட தி.மு.க. அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க தகுதி இல்லாத அரசு. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் பதவி விலக வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுவால் பெண்கள் விதவையாகியுள்ளனர் என்று கனிமொழி எம்.பி. டுவிட் போட்டு இருந்தார். இப்போது ஏன் அவர் டுவிட் போடவில்லை. தமிழகத்தில் மதுவிலக்கை உடனடியாக அமல் படுத்தவேண்டும். இல்லையெனில் தி.மு.க. அரசின் ஆட்சி நாட்கள் எண்ணப்படும் என்றார். அப்போது மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன், தலைமை நிலைய செயலாளர் கிறிஸ்டோபர், துணை செயலாளர் வாழையூர் குணா, மாநில தொண்டரணி மகேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் தினகரன், சண்முகம், சி்ன்னையன், அருண், பாபு, செல்வராசு, மாடச்சாமி, இளைஞரணி விஜயபாபு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.