ஆழத்து விநாயகர் கோவில் திருவிழா

விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-02-14 18:45 GMT

விருத்தாசலம்;

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது போன்று விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. இதில் 2-வது படை வீடாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆழத்து விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஆழத்து விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ஆழத்து விநாயகர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினார்.

இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 22-ந் தேதி ஆழத்து விநாயகர் கோவில் தேரோட்டம் நடக்கிறது.

விபசித்து முனிவருக்கு காட்சி

இந்த விழா முடிந்ததும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 2-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சியும், 5-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், 6-ந் தேதி தீர்த்தவாரி உற்சவமும், 7-ந் தேதி தெப்ப உற்சவமும், 8-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்